அரசியல்

"வேலுமணி புதிய‌ உத்தியை கையாண்டு வருகிறார்” - அமைச்சர் சிவசங்கர் பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி புதிய‌ உத்தியை கையாண்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”இன்று அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பேரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து நடத்தப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்பதை மறக்க கூடாது. உதய் மின்திட்டத்தில் அதிமுக கையெழுத்து போட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா எந்த திட்டத்தை எதிர்த்தாரோ அதை எடப்பாடி அனுமதித்தார். வேலுமணி புதிய‌ உத்தியை கையாண்டு வருகிறார். ஓ.பி.எஸ். அமித்ஷாவை சந்திக்கிறார். எனவே அதிமுகவை காப்பாத்த இதை செய்கின்றார்.

2019-ம் ஆண்டு அ.தி.மு.க.‌ உள்ளாட்சி தேர்தலையொட்டி சொத்து வரி திரும்ப பெறப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரியை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்த போது அதற்கு சம்பந்தம் தெரிவித்தது அதிமுக அரசு தான். 15 லட்சம் கூடும் போது ரயில்வே மற்றும் மெட்ரோ மூலம் என்ன‌ நடவடிக்கை எடுத்தது. விமான சாகசங்கள் நிகழ்வை மத்திய அரசு தான் நடத்தியது. வெயில் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக எடப்பாடி தெரிவிக்கிறார். அரசுக்கு எதிராக போராட்டங்களை அறிவித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவிக்கின்றோம். மக்களை திசை திருப்புவதற்காக செய்யும் போராட்டங்களை எடப்பாடி நிறுத்தி கொள்ள வேண்டும். இது சரி என்று மக்கள் அறிவார்கள்” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், “இன்று திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் அரசு மக்களுக்காக செய்து வருகின்ற நலத்திட்டங்கள் என்பது தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் திமுக கண்ட வெற்றியே சாட்சியாகும். வருகிற 15-ந் தேதிக்கு மேல் போக்குவரத்து துறை ஆலோசனை நடத்தப்பட்டு தீபாவளி பண்டிகைக்கான போக்குவரத்து ஏற்பாடு குறித்து அறிவிக்கப்படும். வெப்பநிலை காரணமாக வெப்ப பாதிப்பு ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தது என்பது உண்மை. மெரினாவில் 15 லட்சம் பேர் கூடும் போது அனைவருக்கும் அரசே தண்ணீர் வழங்குவது என்பது சாத்தியம் அற்றது. நிகழ்ச்சியை நடத்திய விமானப்படை மத்திய அரசினுடையது  ரயில்வே துறையும் மத்திய அரசினுடையது. 15 லட்சம் பேர் கூடுவார்கள் என விமானப்படை தெரிவித்த நிலையில்,மெட்ரோவும் ரயில்வேவும் அதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து  தரவில்லை. ஞாயிற்றுக்கிழமை வழக்கமான அளவிற்கே இரயில்கள் இயங்கின கூடுதலாக இயக்கவில்லை” என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.