அரசியல்

எம்.ஜி.ஆர். சிலை சேதம்: நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள்.. இபிஎஸ் கண்டனம்!

மதுரை அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். சிலை சேதம்: நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள்.. இபிஎஸ் கண்டனம்!
EPS condemns
மதுரை மாவட்டம், அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிலை சேதமும் காவல்துறையின் விசாரணையும்

நேற்று நள்ளிரவு, அவனியாபுரம் பகுதி வாடிவாசல் அருகே அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்துத் தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் அங்குத் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிலை சேதமடைந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமியின் கண்டனம்

இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்:

"மதுரை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி, வாடிவாசல் அருகே அமைந்துள்ள எம்ஜிஆரின் சிலையைச் சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டனத்துக்குரியது. எம்ஜிஆரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை நான் கருதுகிறேன்.

சிலையைச் சேதப்படுத்துவதன் மூலம் எம்ஜிஆர் செய்த சாதனைகளையும் அவரது புகழையும், அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது.

இச்செயலைச் செய்து, பொது அமைதியைச் சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாகக் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.