அரசியல்

ராமதாசுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை.. உடல்நிலை சீராக இருப்பதாக அன்புமணி தகவல்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராமதாசுக்கு பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

ராமதாசுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை.. உடல்நிலை சீராக இருப்பதாக அன்புமணி தகவல்!
Anbumani Ramadoss
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நிலை குறித்து பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக, அவரது மகனும் பா.ம.க. தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

இதய பரிசோதனைக்காக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸுக்கு, இன்று காலை இதய சிகிச்சை நிபுணர்கள் ஆஞ்சியோகிராம் பரிசோதனையை மேற்கொண்டனர்.

அன்புமணி ராமதாஸ் தகவல்

ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், "டாக்டர் ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது 6 மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த பிறகு, பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் அவரைச் சந்திக்க முடியவில்லை" என்று தெரிவித்தார்.

மேலும், "ஆஞ்சியோ செய்யப்பட்டிருப்பதால், 6 மணி நேரத்திற்குப் பிறகு அவர் வெளியே அழைத்து வரப்படுவார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர்" என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு இதே மருத்துவமனையில் ராமதாஸுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, அவர் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவமனைக்குச் சென்று இதயப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.