அரசியல்

கீழடி அகழாய்வுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக? MP சு.வெங்கடேசன் சரமாரி கேள்வி

“தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்” என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது என MP சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

கீழடி அகழாய்வுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக? MP சு.வெங்கடேசன் சரமாரி கேள்வி
MP Su Venkatesan questions to BJP for blocking Keezhadi excavation
தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிவிட்ட பதிவு குறித்தான் கேள்விக்கு, ‘கீழடி அகழாய்வுக்கு நிதி ஒதுக்கியதே மத்திய அரசுதான். நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனே நேரில் வந்து அகழாய்வை பார்வையிட்டார். இவ்விவகாரத்தில் சு.வெங்கடேசன் அரசியல் செய்யக்கூடாது’ என முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை தெரிவித்திருந்தார்.

தமிழிசையின் கருத்து குறித்து மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தற்போது கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார். இதுத்தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பதிவில், “கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்கியதே மத்திய அரசு தான்”.
என்று பாஜக மூத்த தலைவர் திருமதி. தமிழிசை அவர்கள் கூறியுள்ளார். அதனால் தான் கேட்கிறோம்.
முதல் ஆண்டு நிதி ஒதுக்கிவிட்டு அடுத்த ஆண்டு ஏன் நிறுத்தினீர்கள்?

ஆய்வில் எதுவும் கிடைக்கவில்லை என்றால் நிதியை நிறுத்துவார்கள். எல்லாம் கிடைத்த போது ஏன் நிறுத்தினீர்கள்? நீங்கள் ஒதுக்கிய நிதி நீங்கள் சொல்லிவரும் வரலாற்றுக்கு எதிரான உண்மையை கண்டறிந்ததால் பதட்டமடைந்து நிதியை நிறுத்தினீர்கள்.

வேதநாகரிகத்துக்கு முந்தையது தமிழர் நாகரிகம் என்ற உண்மையை உங்களால் ஏற்க முடியவில்லை. எனவே நிதியை நிறுத்தினீர்கள். ஆய்வை நிறுத்தினீர்கள். ஆய்வறிக்கையை எழுதவிடாமல் இடையூறு செய்தீர்கள். அதையும் மீறி ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னும் வெளியிடாமல் முடக்க நினைத்தீர்கள்.”

கீழடி ஆய்வறிக்கை-போதிய நம்பகத்தன்மை இல்லை

”நாடாளுமன்றத்தின் தலையீடு மூலம் வெளியிட முயற்சித்தால் இப்பொழுது “போதிய நம்பகத்தன்மை இல்லை” என்று சொல்லி நிறுத்துகிறீர்கள். இது மட்டுமல்ல, இன்னும் எவ்வளவு இடையூறுகள் செய்தாலும் அனைத்தையும் கடந்து தன் வரலாற்றை மெய்பிக்கும் ஆற்றல் கீழடிக்கு உண்டு. ஏனென்றால் அது புராணங்களில் எழுதப்பட்ட கற்பனை நகரமல்ல. இம்மண்ணில் கட்டி எழுப்பப்பட்ட தமிழர்களின் தொல்நகரம்.

மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தொல் தடங்கள் நீங்கள் நிதியை மறுப்பதன் மூலமோ, ஆய்வை நிறுத்துவதன் மூலமோ மறைந்து விடாது. வெளிப்பட்டுவிட்ட வரலாற்று உண்மைகளுக்கு வெளிச்சம் கூடத்தான் செய்யும். அது தான் அறிவியல்.” என குறிப்பிட்டுள்ளார்.



முன்னதாக கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் கடந்த 2023 ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார். ஆனால் தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்ட போது “விரைவில் வெளியிடப்படும்” என்று தொல்லியல் துறையால் உறுதி மொழி அளிக்கப்பட்டது. ஆனாலும் இப்பொழுது வரை அறிக்கை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி நாடாளுமன்ற உறுதிமொழிக் குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது. இதுக்குறித்து கூறுகையில் தான், தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக என சு.வெங்கடசன் குறிப்பிட்டு இருந்தார்.