அரசியல்

மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம் – தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு

 மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம் – தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு
தவெக தலைவர் விஜய் அழைப்பு
தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு வரும் 21ம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காகச் சுமார் 200 அடி நீளமும், 60 அகலமும் கொண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

தவெக 2வது மாநாடு

தவெக தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களைப் பார்க்க 800 அடி தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு மாலை 3.15 முதல் இரவு 7 மணிவரை நடைபெற உள்ளது. மாநாட்டில் பெண்களுக்காகப் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக மாநாட்டுக்கான தேதி காவல்துறையின் அறிவுறுத்தலுக்கு இணங்க மாற்றப்பட்டது. இதனால் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மேலும் தீவிரமடைந்துள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கண்காணித்து வருகின்றனர்.

விஜய் அழைப்பு

இந்த நிலையில் மாநாட்டுக்கு வரத் தொண்டர்களுக்குத் தவெக தலைவர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர்றோம்... இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட, அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால கடந்து வந்துகிட்டே இருக்கோம்...

வர்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்... இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட்21 வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்...

முதன்மை சக்தி நாம்

முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போர்ல அவங்கள் வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறதுதான் இந்த மாநாடு...

அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி... மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.