அரசியல்

அதிமுக-பாஜக கூட்டணி.. நாளை முக்கிய அறிவிப்பு?

2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதிமுக-பாஜக கூட்டணி.. நாளை முக்கிய அறிவிப்பு?


தமிழகத்தில் வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பணிகளில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும்” என்று கூறினார். எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கபோவதாகவும் பல தகவல்கள் பரவியது.

இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு இன்று இரவு வருகிறார். கூட்டணி குறித்த ஆலோசனை மேற்கொள்வதற்காகவே அமித்ஷா தமிழகத்திற்கு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (ஏப்ரல் 11) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேசவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பும் நாளை வெளியாகும் என்று தகவல் பரவி வருகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக தலைமையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இதுநாள் வரை திரைமறைவில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெளிப்படையாக அறிவிக்கவுள்ளனர் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.