அரசியல்

"அன்புமணிக்கு அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தாதே நான்தான்"- அடித்துச் சொல்லும் ஜி.கே. மணி!

அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி தர ராமதாஸ் சம்மதிக்கவில்லை. நான் அன்புமணிக்கு ரெகமண்ட் செய்து வாங்கி கொடுத்தேன் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.


GK Mani
பா.ம.க.வின் கவுரவத் தலைவரான ஜி.கே. மணி, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, அன்புமணி ராமதாஸ் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அன்புமணியால்தான் ராமதாஸ் இன்று வேதனையில் கண்ணீர் வடிப்பதாக ஜி.கே. மணி குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சியின் வரலாறு மற்றும் ராமதாஸின் தியாகம்

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் பா.ம.க. ஒரு வலிமையான கட்சி; தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக பா.ம.க.வை உருவாக்கியவர் டாக்டர் ராமதாஸ். பா.ம.க.வுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் சொல்லி மாளாது. பாளையங்கோட்டை சிறைக்கு மட்டும்தான் ராமதாஸ் செல்லவில்லை; மற்ற அனைத்துச் சிறைகளுக்கும் சென்றுள்ளார். ராமதாஸ் கட்சிக்காகப் பலமுறை சிறைக்குச் சென்ற நிலையில், அன்புமணி எத்தனை முறை சிறைக்குச் சென்றார்?

அன்புமணியின் அமைச்சர் பதவி மற்றும் வேதனை

"அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ராமதாஸ். மேலும், அன்புமணியை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று முதலில் சொன்னபோது ராமதாஸ் மிகவும் கோபப்பட்டார். அன்புமணிக்கு அமைச்சர் பதவி கொடுக்க ராமதாஸிடம் நான்தான் பேசிச் சம்மதிக்க வைத்தேன். ஆனால், அன்புமணியால்தான் ராமதாஸ் இன்று கண்கலங்குகிறார். அன்புமணியால் ஏற்பட்டுள்ள வேதனை, சோதனைகளால்தான் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார். ஆனால், ராமதாஸ் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று அன்புமணி கூறுவது அநாகரிகமானது.

அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள்

பாமக, ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்காக நீண்ட நாள் உழைத்து வரும் தன்னை அன்புமணி துரோகி என்று கூறுவது ஏன்? அன்புமணி மக்களைச் சந்திக்க மாட்டார்; நிர்வாகிகள் அவரை எளிதில் அணுக முடியவில்லை. அன்புமணிக்குத் தம்பி படை, தங்கை படை என அமைத்து அவரை வளர்த்துவிட்டோம் என்று" ஜி.கே. மணி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார்.