அரசியல்

அரசு பள்ளி மாணவர் தற்கொலை… அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளிக்க வேண்டும்- அண்ணாமலை

“மாணவர் தற்கொலை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர் தற்கொலை… அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளிக்க வேண்டும்- அண்ணாமலை
Annamalai and Anbil Mahesh
திருவெறும்பூர் துவாக்குடியில் அமைந்துள்ள அரசு மாதிரிப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டது குறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அடுத்தடுத்து அரங்கேறிய துயரச் சம்பவங்கள்

இதுதொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில், "பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷின் சொந்தத் தொகுதியான திருவெறும்பூர் துவாக்குடியில் இயங்கி வரும் அரசு மாதிரிப் பள்ளியில், 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஜூன் மாதம், இதே பள்ளியில் மற்றுமொரு 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்திருந்தார்.

முதலமைச்சரால் திறக்கப்பட்ட பள்ளி - தொடர் கேள்விகள்

துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், தமிழகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள், தமிழக அரசு நடத்தும் விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள். இந்த நிலையில், அடுத்தடுத்து இரண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது, பலத்த கேள்விகளை எழுப்புகிறது.

முழு விசாரணை கோரிக்கை மற்றும் மனநல ஆலோசகர்கள் நியமனம்

உடனடியாக, மாணவர் தற்கொலை குறித்த முழு விசாரணை நடத்தி, மேலும் இது போன்ற துயர நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கடந்த ஜூன் மாதம் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்த விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்தும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.

மாணவர்களைத் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்க, பள்ளிகளில் மனநல ஆலோசகர்களை நியமிப்பது குறித்துப் பலமுறை கேள்வி எழுப்பியிருந்தோம். இந்த நியமனங்கள் குறித்த முழு விவரங்களையும், பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கடமை" என்று அவர் தெரிவித்துள்ளார்.