அரசியல்

தேர்தல் ஆணையத்தின் பெயரில் தவறான கடிதம்: பாமக-வில் புயலைக் கிளப்பிய புதிய சர்ச்சை!

டாக்டர் ராமதாஸ் மட்டுமே தலைவர், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட கடிதம் செல்லாது என்று தைலாபுரத்தில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் பெயரில் தவறான கடிதம்: பாமக-வில் புயலைக் கிளப்பிய புதிய சர்ச்சை!
தேர்தல் ஆணையத்தின் பெயரில் தவறான கடிதம்: பாமக-வில் புயலைக் கிளப்பிய புதிய சர்ச்சை!
தேர்தல் ஆணையம் அனுப்பியதாக ஒரு தவறான கடிதம் பரப்பப்பட்டு வருவதாகவும், கட்சியின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் ராமதாஸ் மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை என்றும், அவரது ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவும் செல்லாது எனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று பரபரப்புப் பேட்டி அளித்துள்ளார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்தும் காட்டமான கருத்துகளைப் பதிவு செய்தார்.

நாளை, வன்னியர்களுக்காக இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு உலகெங்கும் உள்ள வன்னியர்கள் அஞ்சலி செலுத்த உள்ளதாகக் கூறிய ஜி.கே.மணி, டாக்டர் ராமதாஸ் எந்தப் பதவியையும் பெறாமல் போராட்ட களத்தை மட்டுமே கண்டவர் என்றும் தெரிவித்தார். வன்னியர் உள்ளிட்ட 115 சமுதாய மக்கள் இன்று இட ஒதுக்கீட்டை அனுபவிப்பதற்கு முக்கிய காரணம் டாக்டர் ராமதாஸ் மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமீபத்தில், தேர்தல் ஆணையம் அனுப்பியதாக ஒரு கடிதம் பரப்பப்பட்டது குறித்துப் பேசிய ஜி.கே.மணி, அது தவறான தகவல் என்றும், அலுவலக முகவரி மாற்றம் என்பது ஒரு பெரிய மோசடி செயல் என்றும் குற்றம் சாட்டினார். அந்தக் கடிதத்தில் கட்சியின் தலைவர் பெயர் இடம்பெறவில்லை என்றும், அன்புமணி வகித்து வந்த செயல் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் ராமதாஸ் மட்டுமே கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி மற்றும் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று டாக்டர் ராமதாஸ் பலமுறை அறிவுறுத்தியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

டாக்டர் ராமதாஸிடமிருந்து கட்சியை அபகரிக்க நினைப்பது தவறான செயல் எனவும், கட்சியில் தொடர விரும்புபவர்கள் அனைவரும் மீண்டும் டாக்டர் ராமதாஸிடம் வந்து சேர வேண்டும் எனவும் ஜி.கே.மணி கோரிக்கை விடுத்தார். வன்னியர் சங்கத்தின் வரலாறு தெரியாதவர்கள் டாக்டர் ராமதாஸை சமூக வலைத்தளங்களில் கொச்சைப்படுத்துவது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.