கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நெருக்கடி காரணமாக கடந்த வாரம், தான் வகித்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இளையராஜாவின் இசைக் கச்சேரியில் நேற்றைய தினம் செந்தில் பாலாஜி பங்கேற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு நடுவே மேடைக்கு சென்ற செந்தில் பாலாஜி இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அப்போது, இளையராஜாவை பாராட்டும் விதமாக கவிதை வாசித்து, கரூரில் அடுத்த ஒரு ஆண்டிற்குள் மீண்டும் இளையராஜா மேடை நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும், அதற்கான தேதியையும் கேட்டுள்ளதாகவும், கரூரில் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடத்துவது எனது நீண்ட கால ஆசை எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ்கான் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகளுடன் அமர்ந்து இசைக் கச்சேரியை செந்தில் பாலாஜி கண்டுகளித்தார்.
தமிழ் மண்ணின் பெரும் பெருமை, தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞரால் இசைஞானி என பட்டம் சூட்டப்பட்டு, இன்று உலகத் தமிழ் உயிர்களின் உணர்வில் கலந்த உயர்ந்தவர் ஐயா இளையராஜா அவர்களின் இன்பமிகு இசை நிகழ்வை இன்று கரூரில் துவக்கி வைத்த போது.. (1/3) pic.twitter.com/pxESLMtfbn
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) May 1, 2025
கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெறும் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியை காண்பதற்கு 500 முதல் 50 ஆயிரம் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை காண திரளான ரசிகர்கள் பங்கேற்று இருந்தனர்.