அரசியல்

அடுத்த விக்கெட்.. திமுகவில் இணைந்தார் முன்னாள் MP மைத்ரேயன்!

டாக்டர். வாசுதேவன் மைத்ரேயன், ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல்வாதி. மூன்று முறை மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்துள்ள மைத்ரேயன் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

அடுத்த விக்கெட்.. திமுகவில் இணைந்தார் முன்னாள் MP மைத்ரேயன்!
Former AIADMK MP Dr.Vasudevan Maitreyan Joins DMK
மைத்ரேயன் தனது அரசியல் வாழ்க்கையை பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) மூலம் தொடங்கினார். 1991ம் ஆண்டு முதல் பா.ஜ.க.வின் தமிழகப் பிரிவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார்.பின்னர், 1999-ல் மறைந்த ஜெயலலிதா அவரது தலைமையினை ஏற்று அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார். ஒரு சில ஆண்டுகளிலேயே ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக மாறினார்.

இதையடுத்து 2002ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இவரின் செயல்பாடுகள் ஜெயலலிதாவிற்கு நம்பிக்கை தரவே அடுத்தடுத்து மாநிலங்களவையில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். ஒருகட்டத்தில் அதிமுகவின் டெல்லி முகமாக மாறினார். மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக (2002-2004, 2007-2013, மற்றும் 2013-2019) பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்தது.

ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கம் மைத்ரேயன் சென்றார். இதனால், அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2023ம் ஆண்டும் ஜுன் மாதம் 9-ம் தேதி தலைநகர் டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அப்போதைய தேசிய பொதுச்செயலாளர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், கடந்த 2024 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைவது தொடர்பாக பேசினார். எடப்பாடியும் கீரின் சிக்னல் கொடுக்க, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் மைத்ரேயன். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி, மைத்ரேயனுக்கு அதிமுகவில் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை சென்னையிலுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் டாக்டர் மைத்ரேயன். கடந்த மாதம் தான், அதிமுகவின் முன்னாள் எம்பி அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு அதிமுக பிரமுகர் திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

தேர்தல் நெருங்கும் தருவாயில், அதிமுகவிலிருந்து சில முக்கிய பிரமுகர்கள் கட்சியிலிருந்து விலகுவதால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.