அரசியல்

கரூர் சம்பவம்: "முன்னாள் அமைச்சர் கண்ணில் பயம் தெரிகிறது"- எடப்பாடி பழனிசாமி

கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைக்குனிவு எனவும் இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம்:
Edappadi Palaniswami
கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தருமபுரியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

அரசு பொறுப்பேற்க வேண்டும்

"ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக்கூட்டம் என்றால் பாதுகாப்பு கொடுப்பது காவல்துறையினரின் கைகளில்தான் உள்ளது. தமிழகக் காவல்துறை முதல்வரின் நேரடிக் கட்டுப்பாடில் உள்ளது. அவ்வாறு பாதுகாப்பு கொடுத்திருந்தால் கரூரில் 41 பேரை இழந்திருக்க மாட்டோம்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தைத் தலைக்குனியவிட மாட்டேன் என்று கூறியிருந்த நிலையில், "நாடே இன்று தலைகுனிந்து விட்டதாகத் தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்க்கிறோம். இந்தச் சம்பவத்தால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய நாடே அதிர்ந்துபோய் இருக்கிறது" என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

"எந்தவொரு பொதுக்கூட்டத்திலும் இல்லாதவாறு இவ்வளவு மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்றாலும், ஆட்சி உங்கள் கைகளில்தான் இருக்கிறது. உங்களைப் பார்த்துத்தானே கேட்க வேண்டும். ஆனால், யார் மீதும் பழி சுமத்திவிட்டு நீங்கள் தப்பிச் சென்றுவிட முடியாது" என்றும் அவர் தி.மு.க. அரசை எச்சரித்தார்.

துணை முதல்வர் மீது விமர்சனம்

கரூர் துயரச் சம்பவம் நடந்த நிலையில் துணை முதல்வர் எங்கே போனார் என்றும், அவர் கரூருக்கு வந்து பார்த்துவிட்டு உடனே மீண்டும் சுற்றுலாவுக்குச் சென்றுவிட்டார் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

மேலும், கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஏன் பதறுகிறார் என்றும், அவர் கண்ணில் பயம் தெரிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பாகுபாடு

இன்று ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்று ஆகிவிட்டது என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் கூடும் இடங்களில் அதிக பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில், மற்ற கட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்றும் கூறினார்.

அரசியல் கட்சி கூட்டங்களுக்குப் பாகுபாடு இன்றி உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் அவர்களுக்கு ஜால்ரா போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், வி.சி.க. தலைவர் திருமாவளவன் தூபம் போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கரூரில் தவறு செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.