அரசியல்

“கொள்கைக் கூப்பாடு போட்டு கொள்ளை அடிப்போர்”- விஜய் கடும் தாக்கு!

கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றிக் கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

“கொள்கைக் கூப்பாடு போட்டு கொள்ளை அடிப்போர்”- விஜய் கடும் தாக்கு!
TVK Vijay
"கொள்கை என்று பேசுவதும் உள்ளுக்குள்ளே பாஜகவோடு உறவாடுவதும் யார் என்று மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றிக் கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

'பழையன கழிதலும் புதியன புகுதலும்..'

தனது அறிக்கையில் விஜய் கூறியிருப்பதாவது: "மதுரை மாநாட்டில் அறிவித்ததைப் போலவே, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் எங்கள் மக்கள் சந்திப்புப் பயணம் நேற்று தொடங்கியது. எளிதாகக் கடந்துவிடும் தூரத்தைக்கூட, மக்கள் கடலில் பல மணிநேரம் நீந்தியே கடக்க வேண்டியிருந்தது. இந்த நிலையை நமது கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் இன்னும் ஆழமாக உணர்ந்திருப்பார்கள். 'விஜய் வெளியே வரவே மாட்டான், மக்களைச் சந்திக்கவே மாட்டான்' என்று ஆள் வைத்துக் கதையாடல் செய்தோர், இப்போது வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கி உள்ளனர்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே பழந்தமிழ் மரபு?. வெளியே கொள்கை, கொள்கை என்று பேசுவதும் உள்ளுக்குள்ளே பாஜகவோடு உறவாடுவதும் யார் என்று மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். எனவே. கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றிக்கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?" என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக அரசு மீது கடும் தாக்கு

திமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள விஜய், "பொய் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்துவிட்டு, கேள்வி கேட்கும் சாமானிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுபவர் யார் என மக்களுக்குத் தெரியாதா? உரிமைக் குரல் எழுப்பிய தூய்மைப் பணியாளர்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடியதா இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு? மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதும், விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டுக் குதூகலித்ததும் இந்த அவலமிகு திமுக அரசுதானே?" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

2026-ல் மக்கள் புரட்சி

மேலும், "மாபெரும் மக்கள் சக்தியுடன் வந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.-ஐ 'அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்' என்று இதேபோன்றவர்கள் அன்று விமர்சித்தனர். மாபெரும் மக்கள் சக்தி, பெண்கள் சக்தி மற்றும் இளைஞர் சக்தியுடன் களம்காணும் தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் எப்படிக் குறை கூறாமல் இருப்பார்கள்? யார் எத்தனைக் கதறினாலும், நாம் முன்னேறிச் செல்வோம். தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்டோரின் கொள்கை வழிகாட்டுதலுடன் வெற்றிநடை போடுவோம். 2026 சட்டமன்றத் தேர்தலில், 1967, 1977 தேர்தல்களில் நிகழ்ந்ததைப் போல மாபெரும் வெற்றி விளைவை மக்கள் சக்தியின் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் நிகழ்த்திக் காட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.