அரசியல்

திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்- அமித்ஷா ஆவேசம்!

தமிழகத்தில் இருந்து திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

 திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்- அமித்ஷா ஆவேசம்!
Amit shah
தமிழக பாஜகவின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்துகொண்டார்.

"தமிழ் மண்ணின் பெருமை"

இந்த மாநாட்டில் பேசிய அவர், "புண்ணிய பூமியான தமிழ்நாட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி. இங்கு தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன். தமிழ் மண்ணைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை துணை குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவர் அடுத்த மாநிலங்களவை கூட்டத்தில் சபாநாயகராக இருப்பார். பிரதமர் மோடி தமிழ் மண், மக்கள், மொழி மீது எப்போதும் பற்று கொண்டவர். சோழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ மன்னன் ராஜேந்திரனுக்கு விழா எடுத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அப்துல் கலாமை ஜனாதிபதி என்ற உயரிய பதவியில் அமர்த்தி பாஜக அழகு பார்த்தது." என்றார்.

"ஸ்டாலினுக்கு எதிராகக் குற்றச்சாட்டு"

தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் குற்ற வழக்கில் கைதானால் பதவியில் நீடிக்கக் கூடாது. 30 நாட்கள் சிறையில் இருக்கும் முதலமைச்சர், அமைச்சர்களைப் பதவிநீக்கம் செய்யும் சட்டத்தை மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார். செந்தில் பாலாஜியும், பொன்முடியும் சிறை சென்றாலும் பதவியில் நீடித்தனர். திமுக அரசின் ஊழல் பட்டியல் நீளமாக உள்ளது. டாஸ்மாக், போக்குவரத்து, கனிம வளம் என பல துறைகளில் திமுக அரசு ஊழல் செய்து வருகிறது" என்று குற்றம் சாட்டினார்.

"2026-ல் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி"

"கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 18 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றது. பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக 21 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. தமிழகத்தில் 2026-ல் பாஜக-அதிமுக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் இருந்து திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். உதயநிதியை முதலமைச்சர் ஆக்குவதுதான் திமுக கூட்டணியின் ஒரே லட்சியம். நான் சொல்கிறேன், ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது" என்று ஆவேசமாகப் பேசினார்.