அரசியல்

உச்சத்தில் திமுக, கம்யூனிஸ்ட் மோதல்.. என்னதான் நடக்கிறது மதுரையில்?

உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கிய விழாவை தொடர்ந்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

உச்சத்தில் திமுக, கம்யூனிஸ்ட் மோதல்.. என்னதான் நடக்கிறது மதுரையில்?
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவிடையே மோதல் போக்கு

மேடைகளில் ஒருவருக்கொருவர் அவன், இவன் என ஒருமையில் பேசி வருவதால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விசிகவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் திமுக சீண்டி வருகிறது.

மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கு முன்பாக திமுக சார்பில் அமைச்சர் மூர்த்தி மற்றும் கோ.தளபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் இந்த முறை மதுரை நாடாளுமன்ற தொகுதியை திமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என தொடர்ச்சியாக பேசி வந்தனர்.

இதனையடுத்தும் திமுக தலைமை அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைகளை கண்டுகொள்ளாமல் மதுரை தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி பின்னர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக 2,09,409 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இந்நிலையில் செப்டம்பர் 9ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஒத்தக்கடை பகுதியில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட 11ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் எம்.பி.சு.வெங்கடேசனும் கலந்துகொண்டார்.

பின்னர் இம்மாதம் 7ஆம் தேதியன்று மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் நடந்தது.

அப்போது பேசிய வெங்கடேசன், “11ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தார்கள். ஆனால், மாநகராட்சி பகுதியில் உள்ள ஏழைகளுக்கு பட்டா கொடுக்காமலும், அரசாணை வெளியிடாமலும் இருக்கிறார்கள்” என திமுக அரசை வலியுறுத்தி பேசினார்.

பட்டா கேட்டு நடத்திய இந்த பேரணியானது பட்டா வழங்கும்  நிகழ்ச்சியை நடத்திய அமைச்சருக்கு எதிராக உள்ளதோ? என நினைத்து மதுரை திமுகவினரும், அமைச்சரின் ஆதரவாளர்களும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியினருக்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதனிடையே அமைச்சர் மூர்த்தியின் தொகுதியான கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்டியூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி் சார்பில் வண்டியூர் கிளை மாநாடு நடைபெற்றது. அதில் வண்டியூர் பகுதிகளில் சாலைகள் மோசமாக இருப்பதால் அதனை சீரமைக்க வேண்டும், ரேசன் கடைகளில் பொருட்கள் தரமற்றதாகவும், எடை குறைவாக இருப்பதாகவும் கூறி கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும், அந்த தீர்மானங்களை வண்டியூர் பகுதியில் பேனராகவும் வைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வைத்த பேனர், திமுகவின் ஆட்சிக்கு எதிராக உள்ளதாக கூறி அமைச்சர் மூர்த்தியிடம் அப்பகுதி திமுகவினர் போனில் சொல்லியதோடு போட்டோவும் எடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஓரிரு நாட்களிலயே திமுக கட்சி் சார்பில் வண்டியூர் பகுதி முழுவதும் கண்டா வரச் சொல்லுங்க...! என்ற வாசகத்துடன் மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு எதிராக பொதுமக்கள் என்ற பெயரில் நோட்டீஸ்கள் ஒட்டபட்டுள்ளது. வண்டியூர் கிராம பொதுமக்கள் என்ற பெயரில் அச்சிடப்பட்டு அமைச்சரின் தொகுதியில் மட்டுமே போஸ்டர் ஒட்டிய சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையை கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசிய போது, “வண்டியூர் சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும், ரேஷன் கடையில் தரமான பொருள்களை வையுங்கள் என்று சொன்னால், ஒருத்தனுக்கு கோபம் வருகிறது. அப்படி என்றால் தரம் இல்லாத பொருளை, எடை குறைவான பொருளை போடுபவனுக்கு பின்னால் இருக்கும் நபருக்குதான் வரும்.

மக்களுக்கான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். எங்களை விட சிறந்த போராட்டக்காரர்களாக இருந்தால் எங்களோடு வாருங்கள் போட்டி போடலாம்” என சவால் விடுத்தார்.

இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பேரணியை சாடும் வகையில் பேசினார்.

மேலும் பேசிய அவர், மதுரையில் மீண்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதலமைச்சரும் துணை முதலமைச்சர் விரைவில் வழங்க இருக்கிறார்கள். இதில் எவனும் உரிமை கொண்டாட முடியாது, தகுதி இல்லாதவர்களை அழைத்து பட்டா கொடுக்கிறேன் என சொல்லி திசை திருப்புகிற வேலையை விட்டுவிடுங்கள்.

தன்னுடைய புகழுக்காக எதையாவது பெற்றுத் தருகிறேன் என தவறான பிரச்சாரம் செய்வதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மக்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என அளித்த வாக்குறுதியை முதலமைச்சர் செய்து வருகிறார். நீர்நிலை புறம்போக்குப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது.

கிடைக்காததை கிடைக்கும் என்றும் வாங்கி தருவோம் என்று சொல்லியும் வருபவர்களை தயவுகூர்ந்து நீங்கள் நம்பி ஏமாந்துவிட வேண்டாம். தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயமாக பட்டாவை பெற்று தரக்கூடிய பணியை அரசுத் துறையும் உள்ளது. அரசு அதிகாரிகளும் முழுவீச்சில் பணிகளை செய்து வருகின்றனர்.
  
முதலமைச்சர் சொன்னதைப் போல நாம் யாரை நம்பியும் இல்லை. நம்மை நம்பி இருப்பவர்களுக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருப்பதுதான் திமுக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேரணியை சாடி பேசியதால் மதுரையில் திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்டா வழங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து, மதுரையில் இலவச பட்டா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடையே வார்த்தை மோதலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அவன் - இவன் என மேடையிலேயே ஒருமையில் சவால் விடுத்து பேசும் வகையில் ஒருவரை ஒருவர் சாடி வருவதால், திமுக-விசிக மோதலை தொடர்ந்து, தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் திமுகவினர் சீண்டி வருவதாக அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதனால் வருகின்ற 2026இல் திமுக இதே கூட்டணி தொடருமா என்பது சந்தேகம் எழுந்துள்ளது.