அரசியல்

"உடல் மண்ணுக்கு, உயிர் அதிமுகவுக்கு" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைத்த ஜெயக்குமார்!

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விலகுவதாகத் தகவல் வெளியான நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உடல் மண்ணுக்கு, உயிர் அதிமுகவுக்கு என்ற நிலைப்பாட்டில் தான் எப்போதும் இருப்பேன் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவில் இணையப்போவதாகச் சமீபத்தில் சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. அதிமுக-பாஜக கூட்டணி அமைத்ததில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றும், அதனால் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அதிமுக, பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. தேர்தலுக்குள் எந்தெந்த கட்சிகள் யாருடன் கூட்டணி மாறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தநிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியிலிருந்து விலகி, திமுகவில் சேருவதாகத் தகவல் வெளியானது.

இதுகுறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளார். தன்னைப் பற்றி இது போன்ற வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு அதிக வருமானம் வந்தால் மகிழ்ச்சிதான் என்று நகைச்சுவையாகக் கூறினார்.

மேலும், நடக்காத ஒரு விஷயத்தைப் பேசுகிறார்கள். எதிர்பார்ப்பவர்களுக்கு அது ஏமாற்றம் தரும் விஷயம் தான். முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியும் நான் மானஸ்தன் என்பது. யார் வீட்டு வாசல் முன்பு பதவிக்காக நான் நின்றது இல்லை.

என் உடல் முழுவதும் அதிமுக ரத்தம் ஓடுகிறது. உடல் மண்ணுக்கு, உயிர் அதிமுகவுக்கு. நான் அப்படி கிடையாது. நாங்கள் திராவிட பார்வை, பெரியார் வழியில், அண்ணா வழியில் வந்தவர்கள். அண்ணாவுக்கு பிறகு எம்ஜிஆர். இதுதான் என்னுடைய கொள்கை மற்றும் நிலைப்பாடு,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஓ. பன்னீர்செல்வம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டதாகவும், அதுவே போதுமானது என்றும் ஜெயக்குமார் கூறினார்.