ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கு போலீசார் உருவாக்கிய கதை என்றும் தனக்கும் அந்த பணத்துக்கும் சம்மந்தமில்லை என்றும் பாஜக நிர்வாகி எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
நெல்லை பாஜக வேட்பாளர் நாகேந்திரனுக்கு சென்னையில் உள்ள அவரது நிறுவனங்களிலிருந்து தேர்தல் செலவுக்காக பல கோடி ரூபாய் பணம் கொண்டு செல்வதாக கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி பெட்டி இருக்கைகளில் அமர்ந்திருந்த மூன்று பேர், தனித்தனி பைகளில் பணம் வைத்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து உளவுத்துறை போலீசார் தாம்பரம் மாநகர போலீசார், மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நெல்லை எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்தை அடைந்ததும் பணம் வைத்திருந்த மூன்று பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணிபுரியும் சதீஷ் அவரது சகோதரர் நவீன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த டிரைவர் பெருமாள் என தெரிய வந்தது அவர்கள் பைகளில் வைத்திருந்த 4 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரன் நெருங்கிய உறவினரும், தொழிலதிபருமான முருகனின் சாலிகிராமம் வீட்டில் போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பணத்துடன் பிடிபட்ட 3 பேரான சதீஷ் அவரது சகோதரர் நவீன் ஸ்ரீவைகுண்டம் டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி, எழும்பூர் சிபிசிஐடி அலுவலகம் வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இதேபோல் பணம் கை மாறியதாக கூறப்படும் தமிழ்நாடு பாஜக தொழிற் பிரிவு தலைவர் கோவர்தனுக்கு சொந்தமான சென்னை கிரீன்வேஸ் சாலை கொரியன் ரெஸ்டாரண்ட், நீலாங்கரை பகுதியில் உள்ள கோவர்தனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது கோவையில் வசிக்கும் தமிழ்நாடு பாஜக பொருளாளர் சேகரிடம் அவரது வீட்டில் வைத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கேசவ வினாயகம், கோவர்தன் உட்பட 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு தலைவர் கோவர்தன் நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இவர்களில் பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கடந்த ஜூன் 5ம் தேதி் ஆஜரானார்.
இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இன்று காலை 10.30 மணியளவில் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த பால் கனகராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர்களுடன் ஆஜராகினார். விசாரணைக்கு ஆஜரான எஸ்.ஆர்.சேகரை தனி அறையில் வைத்து விசாரணை நடைபெற்றது.
ஏற்கனவே கோவையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிபிசிஐடி போலீசார் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை நடத்திய நிலையில், விசாரணையை நிறுத்தி வைக்கக்கோரி எஸ்.ஆர்.சேகர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது செல்போனை கேட்டு துன்புறுத்தக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் இன்று செல்போன் உரையாடல் குறித்து சிபிசிஐடி போலீசார் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை நடத்தியதாகவும், மேலும் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும் இவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 7 மணி நேர விசாரணை முடிவுற்ற நிலையில், மாலை 6 மணியளவில் சிபிசிஐடி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஆர்.சேகர், "பிடிபட்ட ரூ.4 கோடி பணத்தை பாஜக கொடுத்ததாகவும், அதில் எனக்கு சம்மந்தம் இருப்பதாகவும் சொல்லி என்னை விசாரணை செய்ய வர சொன்னார்கள். எனக்கும் அந்த பணத்துக்கும் சம்மந்தமில்லை என தெரிவித்தேன். 190 கேள்விகள் கேட்டார்கள். இது திமுக அரசால் தீட்டப்பட்ட குற்றசாட்டு. பிடிபட்ட பணம் பாஜகவுக்கு சொந்தமான பணம் என போலீஸாரே உருவாக்கிய கதை. அந்த பணத்திற்கும் பாஜகவுக்கும் சம்மந்தம் இல்லை. திமுகவால் தீட்டப்பட்ட கதை" என தெரிவித்தார்.