அரசியல்

அமித்ஷாவின் ஜோசியம் எடுபடாது.. செல்வப்பெருந்தகை பதிலடி!

"யார் அடுத்த பிரதமர் என்று அமித்ஷா கூறும் ஜோசியம் எடுபடாது" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவின் ஜோசியம் எடுபடாது.. செல்வப்பெருந்தகை பதிலடி!
Amit shah and Selvaperunthagai
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு அவர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.

'அமித்ஷாவின் பேச்சு உண்மைக்கு புறம்பானது'

செய்தியாளர் சந்திப்பில் பேசிய செல்வப்பெருந்தகை, “அமித்ஷா, அதிகாரமெல்லாம் தன் கையில் எடுத்துக்கொண்டு 148 கோடி மக்களின் பிரதிநிதியாக நினைத்துக்கொண்டு, யார் அடுத்த பிரதமர், யார் அடுத்த முதலமைச்சர் என ஜோசியம் சொல்லிக்கொண்டு சென்றுள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவுக்கு ஜோசியம் எடுபடலாம், ஆனால் மக்கள் சக்தி முன் அவை எடுபடாது. மக்கள்தான் யார் பிரதமர், யார் முதல்வர் என்று முடிவெடுப்பார்கள். மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள், அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான்” என்றார்.

மேலும், பாஜக கொண்டு வந்துள்ள 'கருப்பு சட்டத்தை' நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது பிரிட்டிஷ்காரர்களின் சட்டத்தைவிட கடுமையானது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

'இந்த ஆட்சி மக்களுக்கானது அல்ல'

பாஜக அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்த செல்வப்பெருந்தகை, “விவசாயிகள் ஒரு டிராக்டர் வாங்கினால், அதற்கு கடனை கட்டத் தவறினால் வீடு ஜப்தி செய்யப்படுகிறது. ஆனால், லட்சக்கணக்கான கோடி கடன் அதானிக்கும், அம்பானிக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது. மத்திய அமைச்சரவை கூட்டம் இதனை அங்கீகரித்துள்ளது. அப்படியென்றால், இது யாருக்கான ஆட்சி? இது மக்களுக்கான ஆட்சி அல்ல, அதானிக்கும் அம்பானிக்குமானது” என்று அவர் தெரிவித்தார்.

தவெக மாநாடு குறித்த கேள்விக்கு பதில்

'தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அதிக கூட்டம் வந்ததாகக் கூறுகிறார்களே?' என்ற கேள்விக்கு அவர், “பீகாரில் ராகுல் காந்தி நடத்திய நடைபயணத்தில் இந்திய வரலாறு காணாத அளவில் கூட்டம் வந்தது. தமிழகத்தில் தவெக மாநாட்டிற்கு கூட்டம் அதிகமாக வந்ததாக அவர்கள் கூறுவதற்கு உரிமை உண்டு. ஆனால், தமிழகம் இதைவிட அதிக கூட்டத்தை பல முறை பார்த்துள்ளது” என்று பதிலளித்தார்.