அரசியல்

ஆம்புலன்ஸை தாக்கிய அதிமுகவினர்.. இபிஎஸ் பரப்புரையில் பரபரப்பு!

எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைக்கு இடையே நுழைந்த ஆம்புலன்ஸை அதிமுகவினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸை தாக்கிய அதிமுகவினர்.. இபிஎஸ் பரப்புரையில் பரபரப்பு!
ADMK members attacked ambulance
2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், இன்று திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டபோது, அங்கு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆம்புலன்ஸை தாக்கிய அதிமுகவினர்

எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருவதற்கு முன்னதாகவே, பெருமளவில் அதிமுகவினர் அங்கு குவிந்திருந்தனர். அந்த நேரத்தில், ஆத்தூர் சாலையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்க, அதிவேகமாக ஒரு ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது.

ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குள் புகுந்ததும், ஆத்திரமடைந்த சில அதிமுகவினர் அதை வழிமறித்து தடுத்து தாக்கியுள்ளனர். அவசர சிகிச்சைக்காக நோயாளி ஒருவர் உள்ளே இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் எனவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விளக்கியுள்ளார். ஆனால், அதற்கு செவிசாய்க்காத சிலர், ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அவரைத் தாக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தலையிட்டு, ஆம்புலன்ஸ் செல்ல வழிவகை செய்தனர். அதன் பின்னரே, ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு

முன்னதாக, கடந்த 18 ஆம் தேதி அணைக்கட்டு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் வந்துவிட்டதால் பேச்சை நிறுத்திவிட்டு ஆம்புலன்சிற்கு வழி விட கூறினார். அப்போது ஆம்புலன்சிஸில் நோயாளிகள் யாரும் இல்லை என தெரியவந்தது.

இதனால், கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, "ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கூட்டத்திலும் ஆம்புலன்சை விட்டு பிரச்சனை செய்துகொண்டு இருக்கிறீர்கள். இது தி.மு.க.வின் கேவலமான செயலாகும். இந்த ஆம்புலன்சில் நோயாளி இல்லை. நேருக்கு நேர் மோத திராணி இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. நான் பேசிய 30 கூட்டங்களிலும் ஆம்புலன்ஸ்களை இடையூறாக விட்டு உள்ளனர்" என்று குற்றம் சாட்டியிருந்தார்.