அரசியல்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி- கிருஷ்ணசாமி பேட்டி

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றும் அந்த வரலாற்று மாற்றத்திற்கான அச்சாணியாகப் புதிய தமிழகம் கட்சி விளங்கும் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி- கிருஷ்ணசாமி பேட்டி
Puthiya Tamilagam Krishnasamy
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றும், அந்த வரலாற்று மாற்றத்திற்கான அச்சாணியாகப் புதிய தமிழகம் கட்சி விளங்கும் என்றும் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மேலும், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிப்பதாகவும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் மக்கள் சந்திப்பு பயணத்தின் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

ஆட்சி மாற்றத்தின் அச்சாணி

அப்போது அவர், "திமுக தங்கள் கூட்டணியை 'மாபெரும் கூட்டணி' என்கிறது. ஆனால், அதில் இன்னும் இரண்டு கட்சிகள் சேர்ந்தாலும் வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் 2026-ல் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அந்த ஆட்சி மாற்றத்தில் புதிய தமிழகம் கட்சி ஒரு மாபெரும் பங்கை ஆற்றும். நாங்கள் தான் அந்த மாற்றத்திற்கான மையமான அச்சாணியாக விளங்குவோம். நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சியை அமைக்கும். அந்த ஆட்சியில் நாங்களும் அதிகாரத்தில் உரிய பங்கு பெறுவோம்.

எங்களுடைய கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அறிவிப்போம். தற்போது நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. கிராமங்கள் தோறும் மக்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து, கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

மாஞ்சோலை தொழிலாளர்களின் கண்ணீர்

மேலும், "மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆறு தலைமுறைகளுக்கும் மேலாக அங்கே வாழ்ந்து வருகிறார்கள். தனியார் நிறுவனம் தோட்டத்தை மூடிவிட்ட நிலையில், தமிழக அரசு அவர்களைக் கட்டாயப்படுத்தி அங்கிருந்து வெளியேற்ற முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

அவர்களுக்குத் தடையில்லாத மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும், அது நடைமுறையில் மறுக்கப்பட்டு வருகிறது. இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பாகும். இதுகுறித்து நாங்கள் விரைவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறோம்.

தொடரும் சாதி வெறி

தொடர்ந்து பேசிய அவர், "தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த நான்கரை ஆண்டுகளில் பல இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகள், கல்லூரிகளில் கூட மாணவர்கள் மத்தியில் சாதி வெறி உணர்வு வளர்ந்து வருகிறது. தமிழக அரசு இதன் மீது சிறப்பு கவனம் செலுத்தி இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.