அரசியல்

"50 ஆண்டு கால அனுபவம் தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும்- செங்கோட்டையனை வரவேற்ற விஜய்!

செங்கோட்டையனின் 50 ஆண்டுகால அரசியல் தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும் என விஜய் தெரிவித்துள்ளார் .


TVK Vijay
தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை வரவேற்று, அக்கட்சியின் தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவரின் அனுபவம் த.வெ.க.வுக்குப் பெரிய பலமாக அமையும் என்று விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைப்பு

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, இன்றுசென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைந்தார். அவருக்குத் த.வெ.க. துண்டை அணிவித்தும், உறுப்பினர் அட்டையை வழங்கியும் விஜய் வரவேற்றார்.

விஜய் வெளியிட்ட வரவேற்பு வீடியோ

செங்கோட்டையனைக் கட்சிக்கு வரவேற்று விஜய் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:

"20 வயது இளைஞராக இருக்கும்போது, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தலைமையை ஏற்று, அவரது மன்றத்தில் இணைந்தவர் அண்ணன் செங்கோட்டையன். அந்த வயதிலேயே எம்எல்ஏ பொறுப்பை ஏற்றவர், அக்கட்சியின் இருபெரும் தலைவர்களுக்கும் (எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா) பெரிய நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படியாக 50 ஆண்டுகாலமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன், இன்று அவருடைய அரசியல் அனுபவமும், களப் பணியும் தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், நம்முடன் கைகோர்க்கும் அவரையும், அவரின் ஆதரவாளர்களையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட பதவிகள்

த.வெ.க.வில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு, த.வெ.க. நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மாவட்டங்களின் அமைப்புப் பொதுச் செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.