அரசியல்

தவெக - காங்கிரஸ் கூட்டணி? விஜய்யுடன் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் ரகசியப் பேச்சுவார்த்தை!

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ராகுல்காந்தின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக - காங்கிரஸ் கூட்டணி? விஜய்யுடன் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் ரகசியப் பேச்சுவார்த்தை!
Rahul Gandhis strategist holds secret talks with Vijay
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் காய் நகர்த்தல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய வியூக வகுப்பாளரான பிரவீன் சக்ரவர்த்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை ரகசியமாகச் சந்தித்து கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

சந்திப்பு மற்றும் ஆலோசனை விவரங்கள்

ராகுல் காந்தியின் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரவீன் சக்ரவர்த்தி, சமீபத்தில் ரகசியமாகச் சென்னை வந்து சென்றுள்ளார். இந்த வருகையின்போது, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் பிரவீன் சக்ரவர்த்தி, விஜய்யை ரகசியமாகச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகச் காங்கிரஸ் மாநிலத் தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டணித் தொடர்பாக, தவெகவுடன் கூட்டணி அமைந்தால் எத்தனை தொகுதிகள் தரப்படும் என்பது உட்படப் பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய்யுடன் பிரவீன் சக்ரவர்த்தி 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

அரசியல் களத்தில் விஜய்யின் நிலைப்பாடு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பலராலும் உற்றுக் கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும், தேர்தல் பணிகளைப் பல மாதங்களுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கவனிக்கத் தொடங்கிவிட்டன. இதனிடையே புதிதாகக் கட்சி தொடங்கிய விஜய்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதிமுக தவெகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், அதிமுகவைத் தவிர்த்துத் தங்களது தலைமையில் புதிய அணியை உருவாக்க விஜய் நினைக்கிறார். அதன்படி, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குக்கூடத் தவெக வலை வீசி வருகிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸும் தவெகவுடன் இணைந்து கொள்வதில் விருப்பம் காட்டி வருவதாக தெரிகிறது.

திமுகவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

நேற்று முன்தினம், காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துக் கூட்டணித் தொடர்பாகப் பேசியிருந்தனர். இந்த நிலையில், விஜய்யுடன் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி ரகசியமாகச் சந்தித்துப் பேசியது, திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.