இந்தியா

அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் வரிசையில் மிதுன் சக்கரவர்த்தி... தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக் 8ம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விருது விழாவில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது.

அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் வரிசையில் மிதுன் சக்கரவர்த்தி... தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!
மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது

சென்னை: ‘ஐ யம் ஏ டிஸ்கோ டான்ஸர்’ பாடல் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இந்தித் திரையுலகில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 74வது வயதான மிதுன் சக்கரவர்த்தி, தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். முன்னாள் ராஜ்யசபா எம்பியான மிதுன் சக்கரவர்த்தியின் கலை சேவையை பாராட்டி தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்குவங்கத்தைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி, மிர்கயா என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற மிதுன் சக்கரவர்த்தி, பாலிவுட் ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலமானார். பாலிவுட்டில் முதன்முறையாக பிரேக் டான்ஸ்-ஐ அறிமுகப்படுத்தியதில் மிதுன் சக்கரவர்த்திக்கு பெரிய பங்கு உள்ளது. 1982ல் வெளியான டிஸ்கோ டான்ஸர் படத்தில் இடம்பெற்ற ‘ஐ யம் ஏ டிஸ்கோ டான்ஸ்டர்’ பாடலில் மிதுன் சக்கரவர்த்தியின் டான்ஸ் பெரியளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 

இந்தி மட்டுமில்லாமல் வங்காள மொழி, ஒரியா, போஜ்பூரி, தமிழ் என பல மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மிதுன் சக்கரவர்த்தி. சினிமாவில் நடிக்க வரும் முன்னர் நக்சலைட்டு குழுவில் இணைந்திருந்த மிதுன், வீர விளையாட்டுகளிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சினிமாவில் பிரபலமான பின்னர் இந்தி நடிகை யோகிதா பாலியை திருமணம் செய்துகொண்டார் மிதுன் சக்கரவர்த்தி. சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் வலம் வரும் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விழாவில், மிதுன் சக்கரவர்த்திக்கு தேசிய விருது வழங்கப்படவுள்ளது. இதுவரை 3 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் வென்றுள்ள மிதுன் சக்கரவர்த்தி, தற்போது தாதா சாகேப் பால்கே விருது பெறவுள்ளார். முன்னதாக இவருக்கு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டு பாலிவுட் சூப்பர் அமிதாப் பச்சனுக்கும், 2019ல் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளன.