இந்தியா

ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை.. பிரதமருக்கு தைரியமிருந்தால் தெளிவுபடுத்தட்டும்- ராகுல் காந்தி

“இந்திய விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என்றும், ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை என்றும் தைரியமிருந்தால் பிரதமர் அவையில் தெளிவுபடுத்தட்டும்” என்று ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை.. பிரதமருக்கு தைரியமிருந்தால் தெளிவுபடுத்தட்டும்- ராகுல் காந்தி
Rahul Gandhi
மக்களவையில் இன்று நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களை தனது உறவினர்களை இழந்ததாகக் கருதுவதாகவும், தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் குடும்பத்தினரைச் சந்தித்துத் துயரத்தைப் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் தனது உரையைத் தொடங்கினார். ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகவும் பொறுப்புணர்வுடனும் செயல்பட்டு, இந்திய ராணுவத்திற்கு மலை போன்ற உறுதியான ஆதரவை அளித்ததாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய ராணுவத்தின் தீரத்தை யாரும் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. இந்திய ராணுவத்துடன் கை குலுக்கினாலே தெரியும் அவர்களது பலம். இந்திய ராணுவத்தை சரியாகக் கையாளும் திறன் 1971-ல் இருந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமெரிக்க கடற்படையின் அச்சுறுத்தலை புறந்தள்ளி, வங்கதேசப் போரை நடத்தினார்.

1971-ல் ஜெனரல் மனேக்ஷாவுக்கு இந்திரா காந்தி முழு சுதந்திரம் கொடுத்தார். ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்ததன் பலனாக வங்கதேசப் போரில் ஒரு லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர். போரை நடத்தி இந்திரா காந்தி வலிமையோடு செயல்பட்டார். இந்திய ராணுவத்தை பயன்படுத்த விரும்பினால், 100 சதவீதம் முழுமையாகப் பயன்படுத்துங்கள். முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். கட்டுப்படுத்தக் கூடாது.

சீனா குறித்த கேள்வி, டிரம்பின் பொய்

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு சீனா பல வகைகளில் உதவி செய்ததை ராகுல் சுட்டிக்காட்டினார். "ஆனால், ஆபரேஷன் சிந்தூர் பற்றிப் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனா என்ற பெயரை ஒரு முறைக் கூட உச்சரிக்கவில்லையே? இந்தியப் படைகளின் நகர்வு குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியுள்ளது. ஆனால், சீனா என்ற பெயரையே பாதுகாப்பு துறை அமைச்சரும், வெளியுறவுதுறை அமைச்சரும் சொல்லவில்லை.

மேலும், "ஆபரேஷன் சிந்தூர் நள்ளிரவு 1.05 மணிக்குத் தொடங்கியது. ஆனால், இந்தியா அதற்கு முன்பே, பாகிஸ்தானைத் தொடர்பு கொண்டு, ராணுவ அமைப்புகள் அல்லாதவற்றை குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்படும் என தகவல் கொடுத்துள்ளது. இது நான் சொல்வது அல்ல, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரே சொன்னது.

பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளை தாக்க வேண்டாம் எனக் கூறியது மிகப்பெரிய தவறு. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நமது விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது உண்மை. இந்திய விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என்றும், ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை என்றும் தைரியமிருந்தால் பிரதமர் அவையில் தெளிவுபடுத்தட்டும்." என ராகுல் சவால் விடுத்தார்.

பிரதமர் மோடியின் பிம்ப அரசியல்

"இந்தியா-பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன் என 29 முறை டிரம்ப் கூறியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் டிரம்ப் பொய் சொல்கிறார் என சொல்லும் தைரியம் மோடிக்கு உள்ளதா? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பொய்யர் என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியால் கூற முடியுமா? பஹல்காம் தாக்குதலின் மூளையான பாகிஸ்தான் ராணுவத் தளபதி, டிரம்ப் உடன் விருந்து சாப்பிடுகிறார். பிரதமர் மோடி டிரம்பிடம் இதை கேட்க முடிந்ததா?" என்று ராகுல் காந்தி சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

“இந்திய ராணுவப் படையை, பிரதமர் மோடி தன்னுடைய பிம்பத்தைக் காப்பாற்றுவதற்காகப் பயன்படுத்துவது ஆபத்தானது. இந்திய ராணுவம், நாட்டின் பிம்பத்தைக் காக்கவே பயன்படுத்த வேண்டும். பாதுகாப்புப் படைகளை தவறாக அவர் பயன்படுத்துவது அபாயகரமானது. ஒரு இக்கட்டான சூழலை எப்படி சமாளிப்பது எனத் தெரியாத நிலையில் அரசு உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.