இந்தியா

மேற்கு வங்கத்தில் பரபரப்பு: வெள்ள நிவாரணப் பணியின்போது பாஜக தலைவர்கள் மீது தாக்குதல்!

மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பாஜக எம்பி மாற்றும் எம்எல்ஏ-கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பரபரப்பு: வெள்ள நிவாரணப் பணியின்போது பாஜக தலைவர்கள் மீது தாக்குதல்!
BJP leaders attacked during flood relief work
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள நாகரகாட்டாவில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பாஜக தலைவர்கள் மீது மர்ம நபர்கள் கல் வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பாஜக எம்.பி. ககேன் முர்மு உட்படப் பல தலைவர்கள் காயமடைந்தனர்.

நிவாரணப் பணியின்போது பதற்றம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காகவும், நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காகவும் பாஜகவின் முக்கியப் பிரமுகர்கள் கொண்ட குழு நாகரகாட்டா பகுதிக்குச் சென்றது. கட்சிப் பிரதிநிதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தபோது, திடீரென கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

பாஜக எம்.பி. படுகாயம்

இந்தத் தாக்குதலில், மால்டா நார்த் தொகுதி பாஜக எம்.பி.யான ககேன் முர்மு படுகாயம் அடைந்தார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அவரது தலையில் கல் பட்டு ஆழமான காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர். அதேபோல், சிலிகுரி தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் சங்கர் கோஷ் உட்படப் பல பாஜக தலைவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்துக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கல்வீச்சு தாக்குதல் திரிணாமுல் கட்சியினரால் நடத்தப்பட்டது என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.