தேசிய புலனாய்வு அமைப்பான (NIA), அமெரிக்காவலிருந்து நாடு கடத்தி கொண்டு வரப்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்த நிலையில், 18 நாள் காவலில் விசாரிக்க என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
மும்பை தாக்குதல்
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இச்சம்பவத்திற்கு, பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத இயக்கம் தான் காரணம் என சொல்லப்பட்டது. இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தஹாவூர் ராணா
வட அமெரிக்க நாடான கனடாவில் வசித்து வரும் பாகிஸ்தான் வம்சாவளியான தொழிலதிபர் தஹாவூர் ராணா என்பவருக்கும் இதில் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதாவது, இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் கிலானி என்ற டேவிட் ஹெட்லி பயன்படுத்திய ஆவணங்களை, அமெரிக்காவில் உள்ள தனது குடியேற்ற நிறுவனத்தைப் பயன்படுத்தி தஹாவூர் ராணா மாற்றிக் கொடுத்துள்ளார். மேலும், தாக்குதலுக்கு திட்டமிட்டு, மூளையாக செயல்பட்ட, பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் டேவிட் ஹெட்லி, 2009ம் ஆண்டில் கைது செய்து 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்த ஒப்புதல்
மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ராணாவுக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், ராணாவை நாடு கடத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை வைத்திருந்தது. இதுதொடர்பான மனுவை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், ராணாவை நாடு கடத்த ஒப்புதல் அளித்தது. ஆனால் தான் இந்திய சிறையில் சித்திரவதை செய்யப்படலாம் என்பதால், நாடு கடத்துவதற்கு எதிராக ராணா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவையும் கடந்த ஜன.21ம் தேதி அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்தியாவிடம் ஒப்படைப்பு
கடந்த பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது, தஹாவூர் ராணா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். அவரை நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்ட நிலையில் நேற்று முன்தினம் இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. இதையடுத்து தனி விமானத்தில், பலத்த பாதுகாப்புடன் ராணா நேற்று ( ஏப். 10) இரவு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்.
என்.ஐ.ஏ விசாரணை
டெல்லியில் உள்ள திஹார் சிறையில், உயர் பாதுகாப்புள்ள வளாகத்தில் அடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி முன் தஹாவூர் ராணாவை ஆஜர்படுத்திய என்.ஐ.ஏ. 20 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்தனர். மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி சந்தர் ஜித் சிங், தஹாவூர் ராணாவை 18 நாள் அனுமதி அளித்தார். இதையடுத்து தஹாவூர் ராணாவிடம் என்.ஐ.ஏ.,போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.