திருப்பதி ஏழுமலையான் கோயில் என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது அங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தான். கோடிக்கணக்கில் விற்பனையாகும் இந்த லட்டின் மூலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அதிக அளவு வசூல் வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் விலங்கின் கொழுப்பு சேர்க்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதாக தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கடந்த ஆண்டு குற்றம்சாட்டினார்.
இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பேசுபொருளாகவும் மாறியது. இந்த சம்பவம் தொடர்பான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐந்து பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
தொடர்ந்து, சிபிஐ இயக்குநர் மேற்பார்வையில் இந்த குழு விசாரணை நடத்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து சிபிஐ மற்றும் ஆந்திர காவல் துறையைச் சேர்ந்த தலா இரண்டு அதிகாரிகள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் ஒருவர் என ஐந்து பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு , ஆந்திராவின் திருமலை திருப்பதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதன் அடிப்படையில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வழங்கிய விவகாரத்தில் விபின் ஜெயின், பொமில் ஜெயின், அபூர்வ சாவ்டா, ராஜு ராஜசேகரன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் மூன்று வெவ்வேறு பால்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கும் ஒப்பந்தப்புள்ளியைப் பெற தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தியதும், நெய் கொள்முதலுக்கு வேறொரு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு மனு அளித்தது. தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு வைத்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கைது செய்யப்பட்டவர்களை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.