இந்தியா

சானிட்டரி நாப்கினில் ராகுல் காந்தி ஸ்டிக்கர்? காங்கிரஸ் கட்சி விளக்கம்

கடந்து இரண்டு நாட்களாகவே காங்கிரஸ் கட்சி பெண்களை அவமானப்படுத்திவிட்டதாக, பீகாரில் பாஜகவினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச சானிட்டரி நாப்கின் பாக்கெட்டிற்குள் இருந்த ஒவ்வொரு நாப்கினிலும் ராகுல் காந்தி ஸ்டிக்கர் இருந்ததாக கூறப்படுவது பொய் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சானிட்டரி நாப்கினில் ராகுல் காந்தி ஸ்டிக்கர்? காங்கிரஸ் கட்சி விளக்கம்
Rahul Gandhi Photo on Sanitary Pads triggers political controversy in Bihar
பீகார் மாநிலத்தில் இந்தாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கி விட்டன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் பெண்களுக்காக சானிட்டரி நாப்கின் பாக்கெட் வழங்கப்பட்டது. பாக்கெட் கவரில் ராகுல் காந்தியின் புகைப்படம் இருந்தது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியது. மேற்கொண்டு பாக்கெட்டிற்குள் இருந்த நாப்கினில் ராகுல் காந்தியின் ஸ்டிக்கர் இருப்பதாக ஒரு வீடியோ வைரலானது. நாப்கினில் ஸ்டிக்கர் இருந்தது என கூறப்படுவது பொய் என காங்கிரஸ் சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

5 லட்சம் பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்:

பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி, "பிரியதர்ஷினி உடான் யோஜனா" திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதுமுள்ள 5 லட்சம் பெண்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழங்கப்படும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் கூறினார். அதனடிப்படையில், காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்ட இலவச நாப்கின்கள் அடங்கிய பாக்கெட்டில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன. இதற்கு அம்மாநில எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் விமர்சிக்கப்பட்டது.

பாஜக செய்தித்தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில்,“பெண்களுக்கு வழங்கப்படும் நாப்கினில் ராகுல் காந்தியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது, பீகார் மாநில பெண்களை அவமதிப்பது போன்றதாகும். வரும் தேர்தலில் பெண்கள் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்திக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றும் தெரிவித்தார்.

விமர்சனங்களுக்கு காங்கிரஸ் விளக்கம்:

அதே நேரத்தில் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா போன்றவர்கள், ”திட்டத்தை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் பொய் விமர்சனங்களை பரப்பி வருகின்றனர்” என தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவது, இந்தியா கூட்டணியின் “மை- பஹின் மான் யோஜானா” திட்டத்தின் ஒரு அங்கமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். பீகாரில் இன்னும் பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமற்ற முறையில் துணிகளை பயன்படுத்தி வரும் சூழலில் தான் இந்த நாப்கின் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.



மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச சானிட்டரி நாப்கின் பாக்கெட்டிற்குள் இருந்த ஒவ்வொரு நாப்கினிலும் ராகுல் காந்தி ஸ்டிக்கர் இருந்ததாக ஒரு வீடியோ இணையத்தில் பரவியது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக வீடியோ ஒன்றும் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

எந்த கட்சியாக இருந்தாலும், விளம்பர ஸ்டண்டுகளை விட பெண்களின் பாதுகாப்பிற்கான தேவையை வலியுறுத்துவதில் தான் கவனம் செலுத்த வேண்டும் என சில நெட்டிசன்கள் இணையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.