PM Modi Wishes Manu Bhaker in Olympics 2024 : 33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் [Manu Bhaker] பங்கேற்றார். 8 பேர் பங்கேற்ற இந்த போட்டியில், முதல் 5 ஷாட்களுக்கு பின்னர் மனு பாக்கர் 2வது இடத்திற்கு முன்னேறினார்.
இதனைத் தொடர்ந்து 10 ஷாட்களுக்கு பின் மனு பாக்கர் 3வது இடத்தில் இருந்தார். 10 ஷாட்களுக்கு பின் ஒவ்வொரு வீராங்கனைகளாக வெளியேற தொடங்கினர். 15 ஷாட்களுக்கு பின்னரும் மனு பாக்கர் 150.7 புள்ளிகளுடன் 3வது இடத்தில் தொடர்ந்து வந்தார்.
கடைசி 5 வீராங்கனைகள் மட்டுமே போட்டியில் இருந்த நிலையில், சீனாவின் லி சூ வெளியேறினார். இதன்பின் கடைசி 4 வீராங்கனைகளுக்கான போட்டியாக உருவாகியது. மற்றொரு சீனா வீராங்கனையும் வெளியேறிய நிலையில், இந்தியாவின் மனு பாக்கருக்கு பதக்கம் உறுதியானது.
இறுதியில், 221.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமை பெற்றார். அத்துடன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் படைத்துள்ளார்.
இதையடுத்து பிரதமர் மோடி மனு பாக்கருக்கு எக்ஸ் வலைத்தளம் மூலம் வாழ்த்துகளை தெரிவித்தார். அதைதொடர்ந்து, தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர் மனுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “டோக்கியோ ஒலிம்பிக்கில், உனது ஆயுதம் உன்னை கைவிட்டுவிட்டது. ஆனால், இந்த முறை எல்லாவற்றையும் எடுத்து வந்துவிட்டாய். இரண்டு பெருமைகளை உங்களை சார்ந்துள்ளது. இந்தியாவுக்காக முதல் பதக்கத்தையும், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் பெண் என இரண்டையும் செய்துள்ளாய்” என்று தெரிவித்தார்.
இதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்துகளை தெரிவித்தனர். மனு பாக்கர் வெற்றியடைந்ததை தொடர்ந்து அவரது சொந்த ஊரான அரியானா மாநிலத்தில் உள்ள ஃபரிதாபாத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சிபொங்க கொண்டாடினர். மகள் வென்றது மிகவும் பெருமையாக இருப்பதாக அவரின் தாயார் சுமேதா பாக்கர் தெரிவித்தார்.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஜப்பான் 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 4 தங்கம், 2 வெள்ளி என 6 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், 3 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியா ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 22ஆம் இடத்தில் உள்ளது.