இந்தியா

கேரளாவில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 60 பேரில் 44 பேர் கைது

கேரளாவில் ஐந்து ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 60 பேரில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 60 பேரில் 44 பேர் கைது
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 60 பேரில் 44 பேர் கைது

கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியில் சமீபத்தில் கேரள அரசின் குழந்தைகள்  நலத்துறை சார்பில் அலுவலர்கள் வீடு வீடாக சென்று சிறுவர், சிறுமிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.  அப்பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் சந்தித்து பேசினர். அப்போது அந்த மாணவி தனது 13 வயது முதல் சுமார் 5 ஆண்டுகள் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த அலுவலர்கள், அந்த மாணவியை மீட்டு காப்பகத்தில் சேர்ந்து உள்ளனர். அதாவது, பாதிக்கப்பட்ட மாணவி 13 வயதாக இருக்கும் பொழுது அவரது பக்கத்து வீட்டு இளைஞர் சிறுமியுடன் நெருங்கி பழகி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வீடியோவில் பதிவு செய்து தனது நண்பர்களுக்கு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த நண்பர்களும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் படிக்க: அரசியல் கோமாளி அண்ணாமலை.. அமைதி காக்கும் பழனிசாமி- கீதா ஜீவன் விளாசல்

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் இதனை பார்த்த பலரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சிறுமி படித்த பள்ளியின் ஆசிரியர், சக மாணவர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சில நேரங்களில் பலர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகள்  நலத்துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும். இந்த வழக்கில் தொடர்புடைய இருவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் அவர்களுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் (Red Corner notice) கொடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 13 பேர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும் சபரிமலை யாத்திரை காலம் முடிந்ததும் இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படையில் அதிக காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.