தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டம் மூலம் கருவுற்ற பெண்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று சத்தீஸ்கரில் மத்திய அரசின் மகதரி வந்தன் யோஜனா (Mahatari Vandan Yojana) என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் கருவுற்ற பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவரது வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பஸ்தார் (Bastar) மாவட்டத்தின் தலூர் (Talur) கிராமத்தில் வசித்து வரும் வீரேந்திர ஜோஷி என்ற நபர் நடிகர் சன்னி லியோன் பெயரில் போலியாக வங்கிக்கணக்கை தொடங்கி மகப்பேறு நிதி உதவியை பத்து மாதங்கள் பெற்றுள்ளார். அதாவது, இந்தாண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை இந்த நிதி உதவியை அவர் பெற்றுள்ளார். மேலும், மகப்பேறு விண்ணப்பத்தில் சன்னி லியோனின் கணவர் பெயர் ஜானி சின்ஸ் என்று அவர் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்ட ஆட்சியர் ஹரிஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்ட நிர்வாகம் புகார் கொடுத்தால் மோசடி செய்த நபர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாவட்ட காவல் துறையும் அறிவித்திருக்கிறது. இச்சம்பவம் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பாலாஜி, மகதரி வந்தன் யோஜனா திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்களில் 50 சதவிகிதம் பேர் இதுபோன்ற போலியான கணக்குகள் மூலம் பயன்பெறுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்துள்ள துணை முதல்வர் அருண் சாவோ, காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு இதுபோன்ற சலுகைகளை வழங்க முடியவில்லையை என்ற பொறாமையில் தீபக் பாலாஜி பேசுவதாக தெரிவித்துள்ளார்.
பொதுவாக வடமாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் திருமண நிதியுதவி பெறுவதற்காக சகோதர்-சகோதரி, மாமனார்- மருகள் திருமணம் செய்ய விண்ணப்பித்துள்ள கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சத்தீஸ்கரில் போலி வங்கி கணக்கு மூலம் மகப்பேறு நிதி உதவி பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் வடமாநிலங்களில் அதிகாரிகள் முறையாக வேலை செய்கிறார்களா..? முதலமைச்சர்கள் என்னதான் செய்கிறார்கள்..? என்ற கேள்வியை எழுப்புவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.