இந்தியா

’ஆபரேஷன் சிந்தூர்’ லோகோவினை வடிவமைத்த வீரர்கள் இவர்கள் தானா?

ஒரு சில வாரங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் அதிகம் முணுமுணுக்கப்பட்ட வார்த்தையாக இருந்தது “ஆபரேஷன் சிந்தூர்”. அதன் லோகோ உணர்வுப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் லோகோவினை வடிவமைத்த வீரர்களின் பெயர்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன.

’ஆபரேஷன் சிந்தூர்’ லோகோவினை வடிவமைத்த வீரர்கள் இவர்கள் தானா?
Design of Operation Sindoor Logo
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து புதிய உத்தரவுகளை வெளியிட்டது. பாகிஸ்தானியர்கள் ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. SVES விசாவில் இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறுமாறும், பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தது.SAARC விசா விலக்கு திட்டத்தின்கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர அனுமதியில்லை என்றும் தெரிவித்தது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1-க்குள் வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் பிரதமர் மோடி தலைமையில் நடைப்பெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர்:

ஒருப்புறம் துறை ரீதியான நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்த இந்தியா, யாரும் எதிர்ப்பாராத வகையில் மே 7 ஆம் தேதியன்று நள்ளிரவு 1:05 மணி முதல் 1:30 மணி வரை (25 நிமிடங்களில்) பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது இந்தியா. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, “ஆபரேஷன் சிந்தூர்” என பெயரிட்டுள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் லோகோ உணர்வூப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனிடையே இந்த லோகோவினை வடிவமைத்தது லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றும் ஹவில்தார் சுரேந்தர் சிங் என்பது தெரிய வந்துள்ளது.

உணர்வுப்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட லோகோ:

லோகோ வடிவமைப்பில் "OPERATION SINDOOR" என்ற வார்த்தைகள் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தன. இதில் SINDOOR என்பது குங்குமத்தை குறிக்கும் சொல். அதில் வரும் 'O' என்ற எழுத்தில் குங்குமப் பொட்டு சிதறிக் கிடப்பது போல் சித்தரிக்கப்பட்டு இருந்தது. அந்தக் குங்குமத்தில் இருந்து சிதறிய துகள்கள் ரத்தத் துளிகளைப் போலக் காட்டப்பட்டுள்ளன.

இந்திய கலாச்சாரத்தில், குங்குமம் திருமணமான இந்துப் பெண்ணின் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது. லோகோவில் சிதறிய குங்குமம், பயங்கரவாதத் தாக்குதலில் இழந்த உயிர்களையும், தங்கள் கணவர்களை இழந்த பெண்களின் துயரத்தையும் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. சிவப்பு நிறக் குங்குமம் பாரம்பரியம், சக்தி மற்றும் வேதனை என ஆழமான உணர்வுபூர்வமான அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இந்த லோகோ இந்தியப் படைகளின் உறுதியையும், தாக்குதலின் தீவிரத்தையும் கண் முன்னே நிறுத்தியது என்றால் மிகையல்ல.

ஆபரேஷன் சிந்தூர் லோகோவினை வடிவமைத்த லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றும் ஹவில்தார் சுரேந்தர் சிங் ஆகியோருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை இருந்த நிலையில், இரு நாடுகளிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் தாக்குதலை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் எல்லைப்பகுதிகளில் அமைதி திரும்பியது குறிப்பிடத்தக்கது.