வயநாடு: கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் இடைவிடாமல் கொட்டிய கனமழை காரணமாக வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கட்டடங்கள், அங்கு இருந்த பள்ளிகள், வீடுகள் என அனைத்தும் அப்படியே மண்ணுக்குள் புதையுண்டன.
வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மண்ணில் புதையுண்டு தூக்கத்திலேயே உயிரை பறிகொடுத்தனர். மேலும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களில் இருந்து தொடர்ந்து தோண்டத் தோண்ட சடலங்கள் மீட்கப்பட்டு வருவது ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து விடாமுயற்சியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மிகப்பெரும் பேரழிவை சந்தித்த வயநாடு மக்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். வயநாடுக்கு முதல் ஆளாக உதவி செய்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கினார். கர்நாடக அரசு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள் கட்டித் தரப்படும் என உறுதி அளித்துள்ளது. இதேபோல் ஆந்திர அரசு ரூ.10 கோடி நிதியுதவி செய்துள்ளது.
இதேபோல் பல்வேறு நடிகர்களும் வயநாடு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்தார். நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ரூ.50 லட்சத்தை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினார்கள். விக்ரம் ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார். இதேபோல் நடிகை நயன்தாரா, அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சம் கொடுத்துள்ளனர்.
மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் இணைந்து ரூ.35 லட்சம் அளித்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள மோகன்லால் ரூ.3 கோடி வழங்கியுள்ளார். இப்படி பல்வேறு தரப்பினர் வயநாடு மக்களுக்கு உதவிவர, வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குரும், லாட்டரி அதிபருமான சார்லஸ் மார்ட்டின் ரூ.2 கோடி வழங்கியுள்ளார்.
இந்த நிவாரண தொகையை கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து மார்ட்டின் குழுமத்தினர் வழங்கியுள்ளனர். இதில் 1 கோடி ரூபாய் முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கும், மேலும் 1 கோடி ரூபாய் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள், மருத்துவ உதவி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்கவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சவாலான நேரத்தில் வயநாடு மக்களுடன் உறுதுணையாக இருப்பதாக சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.