Kolkata Doctor Murder Case : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் மிக கொடூரமாக சிதைக்கப்பட்டு மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை ஒரே சஞ்சய் ராய் என்ற ஒரு குற்றவாளியை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மாணவியின் படுகொலைக்கு பிறகு ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்குள் புகுந்து வன்முறை கும்பல் அங்குள்ள பொருட்களை சூறையாடியது, காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி வன்முறை கும்பலைக் கலைத்தது என மேற்கு வங்கமே பதற்றமாக காணப்பட்டது.
மருத்துவ மாணவியின் படுகொலையை கண்டித்து முதலில் மேற்கு வங்கம் முழுவதும் நடந்த போராட்டம் பின்பு நாடு முழுவதும் பரவியது. பல்வேறு தரப்பினரும் மாணவிக்கு நீதி வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி படுகொலையை கண்டித்தும், மருத்துவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்கக்கோரியும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்பு உச்சநீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் ''நான் தான் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றேன்'' என்று முதலில் தெரிவித்த சஞ்சய் ராய் பின்பு, ''மருத்துவ மாணவியை நான் கொலை செய்யவில்லை. நான் அறைக்கு சென்றபோதே அவர் இறந்து கிடந்தார். வேறு யாரோ கொலை செய்து விட்டு என்மீது பழிபோட சதி செய்து வருகின்றனர்'' என்று யூ டர்ன் அடித்தார்.
சஞ்சய் ராய் பெண்களிடம் கொடூரமாக நடக்கும் ஒரு சைக்கோ என்று போலீசார் தெரிவித்தனர். அதே வேளையில் இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் மட்டும் ஈடுபடவில்லை. இதில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சஞ்சய் ராய் இப்போது பிரசிடென்சி சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக ஜெயிலில் தயாரிக்கப்படும் உணவுகளே கைதிகளுக்கு வழங்கப்படும். அந்த வகையில் சஞ்சய் ராய் அடைக்கப்பட்டுள்ள சிறையில் ரொட்டி சப்ஜி உணவாக வழங்கப்படுகிறது. ஆனால் இதை சாப்பிட மறுத்த சஞ்சய் ராய், தனக்கு 'எக் நூடுல்ஸ்' வழங்கும்படி சிறை ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறை அதிகாரிகள் சஞ்சய் ராயை கடுமையாக கண்டித்ததால் அவர் வழக்கமான உணவை சாப்பிட்டுள்ளனர்.
ஒரு கொடிய பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட கைதி, சிறையில் தனக்கு இந்த உணவுதான் வேண்டும் என்று அடம்பிடித்ததற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ''இதுபோன்ற கொடூர பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை இந்தியாவில் கொண்டு வர வேண்டும். அப்படி செய்யாமல் அவர்களை சிறையில் அடைத்து உணவு கொடுத்து நீண்ட நாட்கள் பாதுகாத்தால் சஞ்சய் ராய் போலத்தான் இருப்பார்கள்'' என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.