இந்தியா

onam festival: என்ட ஸ்டேட் கேரள.. மோனாலிசாவிற்கு கசவு சேலையினை உடுத்திய சேட்டன்ஸ்!

ஓணம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புகழ்பெற்ற ஓவியமான மோனாலிசாவிற்கு தங்களது பாரம்பரிய கேரள கசவு சேலையினை உடுத்தியது போல் புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளியுள்ளது கேரள மாநில சுற்றுலாத்துறை.

onam festival: என்ட ஸ்டேட் கேரள.. மோனாலிசாவிற்கு கசவு சேலையினை உடுத்திய சேட்டன்ஸ்!
Kerala Tourism Dresses Mona Lisa in Traditional Kasavu Saree for Onam
உலகளவில் மிகவும் புகழ்பெற்ற ஓவியங்கள் என ஒரு பட்டியல் எடுத்தால் அவற்றில் மோனலிசா ஓவியமும் இடம்பெறும். இந்த ஓவியத்தினை வரைந்தவர் பல்வேறு துறைகளில் மேதையாக விளங்கிய லியானர்டோ டா வின்சி.

ஓணம் பண்டிகை வருவதையொட்டி, மோனாலிசாவிற்கு பாரம்பரியமான கேரள கசவு சேலையினை உடுத்தி அழகு பார்த்துள்ளார்கள் சேட்டன்ஸ். கேரள சுற்றுலாத்துறை சார்பில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

லியானர்டோ டா வின்சி வரைந்த ஓவியத்தில் மோனலிசா மெல்லிய புன்னகையுடன் பலரது கண்ணுக்கு காட்சியளிப்பார். ஆனால் நமது சேட்டன்ஸ், மோனலிசாவிற்கு அவர்களின் பாரம்பரிய கேரள கசவு சேலையினை உடுத்தியதோடு மட்டுமின்றி தலையில் மல்லிக்கைப்பூ, நெற்றியில் சின்னதாக பொட்டு, கழுத்திலும், கையிலும் நகைகள் அணிவித்து கேரளத்தை பூர்விகமாக கொண்ட ஒரு பெண்ணாகவே மாற்றியுள்ளார்கள்.



இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மலையாளிகள் பலர் கேரள சேலை உடுத்திய மோனலிசாவிற்கு வித்தியாச வித்தியாசமாக பெயர் சூட்டி மகிழ்ந்து வருகிறார்கள்.

கேரள கசவு சேலையின் சிறப்பு:

கேரள கசவு சேலையின் (Kasavu Saree) தனித்துவம் என்னவென்றால், வெண்மை அல்லது யானை தந்தம் போன்ற நிறத்தில் இருக்கும் பருத்தி அல்லது பட்டுத் துணியில், அதன் விளிம்புகளில் (border) தங்க நிற ஜரிகை வேலைப்பாடுகளுடன் நெய்யப்பட்டிருக்கும். "கசவு" என்ற சொல்லுக்கு மலையாள மொழியில் "தங்க நூல்" என்று பொருள். இந்த தங்க நிற ஜரிகைதான் கசவு சேலையின் முக்கிய அடையாளமாகும். ஓணம் போன்ற பண்டிகை நாட்களில் கேரள கசவு சேலையினை பெண்கள் உடுத்துவது வழக்கம். அதன் அடிப்படையில் தான் மோனாலிசாவிற்கு கேரள கசவு சேலையினை உடுத்தி சுற்றுலாப் பயணிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது கேரள மாநில சுற்றுலாத்துறை.

இந்த ஆண்டு ஓணம் பண்டிகை எப்போது?

2025 ஆம் ஆண்டில், ஓணம் பண்டிகை வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி திருவோணத்தில் முடிவடைகிறது.

ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?

ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான மிக முக்கியமான காரணம், மகாபலி சக்கரவர்த்தி பூலோகம் வருவது என கூறப்படுகிறது. புராணங்களின்படி, மகாபலி ஒரு அரக்கர் குல அரசனாக இருந்தாலும், அவர் நேர்மையுடனும், நல்லாட்சியுடனும் ஆட்சி செய்தார். அவரது ஆட்சியில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

அவரது புகழ் வளர்வதைக் கண்ட தேவர்கள், மகாபலியின் ஆட்சி உலகையே ஆட்கொண்டுவிடும் என அஞ்சினர். எனவே, மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து, பூலோகம் வந்து மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டார்.

மகாபலி சக்கரவர்த்தி அதற்கு சம்மதிக்க, வாமனர் முதல் அடியால் பூமியையும், இரண்டாவது அடியால் வானத்தையும் அளந்தார். மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று கேட்டபோது, மகாபலி தனது தலையை நீட்டி, அதில் மூன்றாவது அடியை வைக்குமாறு கூறினார். வாமனர் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவரைப் பாதாள லோகத்திற்கு அனுப்பினார். மகாபலி, ஆண்டுக்கு ஒருமுறை தான் ஆட்சி செய்த மக்களைப் பார்க்க பூலோகம் வர வேண்டும் என்று வாமனரிடம் வரம் கேட்டார். அந்த வகையில், மகாபலி சக்கரவர்த்தி பூலோகம் வரும் நிகழ்வினை தான் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடடுகிறார்கள்.

கேரளாவில் உள்ள மக்கள், சாதி மதம் கடந்து இந்த நிகழ்வினை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.