இந்தியா

தண்ணி காட்டும் இந்தியா.. முடிந்துபோன முக்கிய ஒப்பந்தம்.. பாகிஸ்தான் சந்திக்கவுள்ள ஆபத்து!

பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளது.

தண்ணி காட்டும் இந்தியா.. முடிந்துபோன முக்கிய ஒப்பந்தம்.. பாகிஸ்தான் சந்திக்கவுள்ள ஆபத்து!
முடிந்துபோன முக்கிய ஒப்பந்தம்.. பாகிஸ்தான் சந்திக்கவுள்ள ஆபத்து!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். கோழைத்தனமான இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானின் இயங்கி வரும் பிரிவினைவாத அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது..

இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், 5 முக்கிய அறிவிப்பை வெளியிட்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்திய அரசு.

இதில் முக்கிய அறிவிப்பு தான் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு. அதாவது, எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1960ம் ஆண்டில் செய்துக்கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கு இடையே சிந்து நதியும் அதன் துணை நதிகளை பாய்கிறது. இந்த நதிகளை இரு நாடுகளும் பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என உலக வங்கி பல பேச்சுவார்த்தைகள் நடத்தியது. சுமார் ஒன்பது வருட பேச்சுவார்த்தைக்கு பிறகு, செப்டம்பர் 19, 1960ம் ஆண்டுல் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. கராச்சியில் அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் மற்றும் அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி முகமது அயூப் கான் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதையே சிந்தி நதிநீர் ஒப்பந்தம் என அழைக்கிறோம்.

சித்து நதி 6 துணை நதிகளை கொண்டுள்ளதால் இந்த ஒப்பந்தத்தின் படி, கிழக்கில் உள்ள ரவி நதி, பியஸ் நதி, சட்லஜ் நதி இந்தியாவின் வசம் வந்தது, மேற்கில் உள்ள நதிகளான சிந்து, ஜீலம், செனாப் நதிகள் பாகிஸ்தான் வசம் சென்றன.

மேலும், சிந்து நதியின் நீரில் 20 சதவீதம் மட்டுமே இந்தியா பயன்படுத்த முடியும், மீதமுள்ள 80 சதவீதம் நீர் பாகிஸ்தானுக்கு செல்கிறது. இதனால் இந்த நதிநீர் பாகிஸ்தானின் உயிர்நாடியாக உள்ளது. பாகிஸ்தானின் 80 சதவீத விவசாய நிலங்கள், அதாவது சுமார் 16 மில்லியன் ஹெக்டர் விவசாய நிலம் இந்த சிந்து நதியின் நீரையே நம்பியுள்ளது. 210 மில்லியனுக்கு அதிகமாக பாகிஸ்தான் மக்களின் தண்ணீர் தேவைகளும் இதிலிருந்தே கிடைக்கிறது. இந்த ஒப்பந்தத்தால் அரிசி, கோதுமை, கரும்பு, பஞ்சு விளச்சல் செழிப்பாக இருப்பதால், இதன் மூலம் பாகிஸ்தானின் ஜிடிபி.யில் 25% பங்கு வகிக்கிறது.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது பாகிஸ்தான். இந்த நிலையில், இந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு, உணவு தட்டுப்பாடு, தண்ணீர் பஞ்சம், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் மின்சாரத் தட்டுப்பாடு, வேலையின்மை என பல நெருக்கடிகள் ஏற்படும்.

மனிதாபிமான அடிப்படையில் போடப்பட்ட இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம் போர், பஞ்சம் என அனைத்தையும் கடந்து 64 ஆண்டுகளாக இந்தியா-பாகிஸ்தான் இடையே இருந்து வந்தது. இந்நிலையில், ஜம்முவில் ஊடுருவி ஒன்றும் அறியாத அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என எண்ணி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்துள்ளது இந்தியா.

இந்தியாவின் இந்த மூவ், பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைக்கும் எனவும், இப்படியாவது இந்தியா மீதான தீவிரவாத தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வரட்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.