இந்தியா

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. அட்டாரி - வாகா எல்லை மூடல்!

பஹல்காம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு கெடு விதித்த நிலையில், அட்டாரி வாகா எல்லையில் வெளியேறி வருகின்றனர்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. அட்டாரி - வாகா எல்லை மூடல்!
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. அட்டாரி - வாகா எல்லை மூடல்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படும் எனவும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே 1-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனவும் பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 30ஆக குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் எனவும் SVES விசாவில் தற்போதுள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவிற்குள் பயணம் செய்ய அனுமதி இல்லை எனவும், சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில், பிரபல சமூக ஊடக தளமான X தளத்தில் இருந்து பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அட்டாரி வாகா எல்லையில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வருகின்றனர்.