மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், கடந்த 8-ம் தேதி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்த நிலையில், சம்பவம் தொடர்பாக CBI விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொல்லப்பட்ட தனது மகளுடன் பணிபுரிந்த சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி அவர்களது பெயர்களுடன் மாணவியின் பெற்றோர் புகாரளித்தனர். அத்துடன் நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே வேளையில் சம்பவம் நடந்த மருத்துவமனை, போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. அதில், இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மருத்துவருக்காக நீதி கேட்டும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் போராட்டம் காரணமாக பல இடங்களில் மருத்துவத்துறை முடங்கி வருகிறது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியது. அதில், “கையால் கழுத்தை நெரித்ததால், மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்துள்ளது என்றும், பாலியல் வன்கொடுமையும் நடந்ததற்கு மருத்துவ ரீதியிலான ஆதாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பெண் பயிற்சி மருத்துவரின் கன்னம், உதடு, மூக்கு, கழுத்து, கைகள் என உடலின் வெளிப் பகுதியில் 16 இடங்களிலும், கழுத்து தசை, உச்சந்தலை என உள் பகுதியில் 9 இடங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அவர் கடுமையாக போராடி உள்ளார் என தெரிகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி படுகொலை விவாகரம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அபோது, “நெறிமுறைகள் வெறும் காகித அளவில் இருக்க முடியாது. கொல்கத்தா நிகழ்வை பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், புகைப்படம், வீடியோ உள்ளிட்டவை வெளியிடுவது மிகவும் கவலை அடைய வைத்துள்ளது. இதுபோன்ற விவகாரத்தில் பாதிக்கப்பட்டவரின் புகைப்படத்தை வெளியிடக்கூடாது என உத்தரவு இருந்தும் புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் மருத்துவமனை நிர்வாகம் குறித்து கூறிய நீதிபதிகள், “படுகொலை சம்பவத்தை மருத்துவமனை நிர்வாகம் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் என மூடி மறைப்பதற்கு பார்த்துள்ளது; நள்ளிரவு வரை முதல் தகவல் அறிக்கை [FIR] பதியப்படவில்லை. அதன் பின்னும் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும் கொலை என ஏன் பதியப்படவில்லை?
இந்த சம்பவத்தை உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் என மருத்துவமனை இயக்குனர் கடந்து போக முற்பட்டுள்ளார். மருத்துவமனை இயக்குனர் எப்போது இந்த வழக்கில் சேர்கப்பட்டார்? பெண்கள் தங்கள் பணியிடங்களில் பாதுகாப்பாக இருக்க முடியாவிட்டால் அரசியலமைப்பின் கீழ் சமத்துவம் என்பதற்கான அர்த்தம் என்ன?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.