இந்தியா

மதுபோதையில் பள்ளியில் தூங்கிய தலைமை ஆசிரியர்.. கர்நாடகாவில் அதிர்ச்சி

கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதையில் பள்ளியில் தூங்கிய தலைமை ஆசிரியர்.. கர்நாடகாவில் அதிர்ச்சி
Headmaster falls asleep in school under the influence of alcohol
கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி தாலுகாவில் உள்ள கோனல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நிங்கப்பா, பள்ளி நேரத்தில் மதுபோதையில் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதையில் பள்ளி வளாகத்திலேயே உறங்கிய அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவம் குறித்து வெளியான தகவல்படி, அம்பாதேவி நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரான நிங்கப்பா, நேற்று முன்தினம் ( ஜூலை 25) பள்ளிக்கு குடிபோதையில் வந்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் தடுமாறியபடி வந்த அவர், பள்ளி வளாகத்தில் உள்ள சமையலறை கூடம் அருகில் படுத்துத் தூங்கிவிட்டார்.

இதை கண்ட பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். போதையில் பள்ளி வளாகத்தில் படுத்துத் தூங்கிய நிங்கப்பாவை அப்பகுதியினர் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ மிக வேகமாக பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து முன்னாள் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் தர்மராஜ் கோனல் கூறுகையில், நிங்கப்பா மதுபோதையில் பணிக்கு வருவது இது முதல் முறையல்ல என்றும், இதற்கு முன்பும் அவர் மீது இதேபோன்ற புகார்கள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும் கற்றுக்கொடுக்க வேண்டிய தலைமை ஆசிரியர் குடிபோதையில் பள்ளிக்கு வந்தது கண்டிக்கத்தக்கது என்றும், அவரை பணிநீக்கம் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதற்கிடையில், தலைமை ஆசிரியர் நிங்கப்பா மதுபோதையில் தூங்கும் வீடியோ வைரலானதை அடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து வட்டார கல்வி அதிகாரி அதிரடி உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.