Google Map Launch New AI Updates in Chennai : ”மதுரைக்கு வழி வாயிலே” என்ற பழமொழியை அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆம்! செல்ல வேண்டிய இடத்துக்கு வழியே தெரியாவிட்டாலும், வாய் இருந்தால் நாலு பேரிடம் கேட்டுக் கேட்டு போய்விட முடியும் என்பது தான் இதன் அர்த்தம். முன்பெல்லாம் அப்படித்தான் இருந்தது, யாராவது புதிதாக ஒரு ஊருக்குச் செல்ல வழி தெரியவில்லை என்றால், செல்லும் இடமெல்லாம் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி நிறுத்தி வழி கேட்டுச் செல்வது வழக்கம். கிராமங்களில் இருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வருவோர் வழி கேட்பது இன்னும் சிரமமானது. சிக்னல் எங்கே இருக்கும், எந்த வழியாக சென்றால் எங்கு போக முடியும் என்பதை கண்டுபிடிப்பது, தலையை சுற்றி மூக்கை தொடும் கதையாக இருந்தது.
வாகன ஓட்டிகளின் இந்த கவலைகளுக்கெல்லாம் முடிவு கட்டியது கூகுள் மேப். கடந்த சில ஆண்டுகளாக, அதாவது நவீன ரக ஸ்மார்ட் போன்களின் வருகைக்குப் பின்னர் கூகுள் மேப் மூலம் வாகன ஓட்டிகள் அனைவருமே ரூட் தல-யாக மாறினர். அதோடு கார்களிலும் ஜிஎபிஸ், கூகுள் மேப் ஆப்ஷன்கள் வந்த பின்னர், வாகன ஓட்டிகள் யாரும் தப்பித்தவறி கூட மற்றவர்களிடம் வழி கேட்பது இல்லை. அந்தளவிற்கு கூகுள் மேப்பே அவர்களின் துணையாகிப் போனது. இருப்பினும் சில நேரங்களில் கூகுள் மேப் தவறான அல்லது குறுகலான வழியை காட்டி, வாகன ஓட்டிகளை அலற விடும் சம்பவங்கள் நடந்தேறின.
கார் அல்லது அதைவிட பெரிய வாகனங்களில் சென்றவர்கள் முட்டுச் சந்துகளில் மாட்டிக் கொண்டதும், ஏரி, கிணறுகளில் காருடன் கவிழ்ந்த சம்பவங்களும், ஏடாகூடமாக வழியே இல்லாத இடத்தில் சென்று சிக்கியதுமாக பல செய்திகள் வெளியாகியுள்ளன. கூகுள் மேப்பில் நாம் செல்ல வேண்டிய இடத்தை தேர்வு செய்யும் போது, எந்த வாகனத்தில் பயணிக்கிறோம் என்பதையும் செலக்ட் செய்ய வேண்டும். சிலர் காருக்கு பதிலாக இருசக்கர வாகனத்தை செலக்ட் செய்வதாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தன. அதேநேரம் சரியான வாகனங்களையும் இடங்களையும் தேர்வு செய்தாலும் கூகுள் மேப் விபூதி அடித்த கதைகள் மீண்டும் மீண்டும் நடந்தன.
இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் விதமாக புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது கூகுள் மேப். இது ஏஐ டெக்னாலஜி துணையுடன் உருவாக்கப்பட்டுள்ளதாம். அதன்படி, கார்கள் அல்லது 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் குறுகலான, போக்குவரத்து நெரிசலான சாலைகளை தவிர்த்து அகலப் பாதையில் செல்வதற்கு இது உதவி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அதேபோல், தெருவின் அமைப்பு, சாலையின் அகலம், நீளம், கட்டங்களுக்கு இடையேயான தூரம், முட்டு சந்து உட்பட அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும்.
மேலும் படிக்க - சரியும் தங்கம் விலை... இன்றைய ரேட்?
கூகுள் மேப் அறிமுகப்படுத்தவுள்ள இந்த நவீன அப்டேட்டை முதலில் 8 நகரங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாம். அதன்படி, சென்னை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், இந்தூர், போபால், புவனேஸ்வர், கவுகாத்தி ஆகிய இடங்களில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதனால் கூகுள் மேப் பயனாளர்கள் இன்னும் துல்லியமாக தங்களது இடங்களுக்கு பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.