இந்தியா

மருத்துவ மாணவி கொலை.. ஆர்.ஜி.கர் மருத்துமனை முன்னாள் முதல்வர் அதிரடி கைது!

மருத்துவ மாணவி கொல்லப்பட்டவுடன், அதை சந்தீப் குமார் கோஷி தற்கொலை என மாணவியின் பெற்றோரிடம் கூறியிருந்தார். மேலும் மருத்துவ மாணவியின் கொலையை அவர் மறைக்க முயன்றதாகவும், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஊழலில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

மருத்துவ மாணவி கொலை.. ஆர்.ஜி.கர் மருத்துமனை முன்னாள் முதல்வர் அதிரடி கைது!
Sandeep Kumar Ghosh

டெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் மிக கொடூரமாக சிதைக்கப்பட்டு மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை ஒரே சஞ்சய் ராய் என்ற ஒரு குற்றவாளியை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மருத்துவ மாணவியின் படுகொலையை கண்டித்து முதலில் மேற்கு வங்கம் முழுவதும் நடந்த போராட்டம் பின்பு நாடு முழுவதும் பரவியது. பல்வேறு தரப்பினரும் மாணவிக்கு நீதி வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி படுகொலையை கண்டித்தும், மருத்துவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்கக்கோரியும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு உச்சநீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மருத்துவ மாணவி கொல்லப்பட்டவுடன், அதை  சந்தீப் குமார் கோஷி தற்கொலை என மாணவியின் பெற்றோரிடம் கூறியிருந்தார். மேலும் மருத்துவ மாணவியின் கொலையை அவர் மறைக்க முயன்றதாகவும், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஊழலில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் குற்றம்சாட்டப்பட்டது. 

மருத்துவ மாணவி மரணம் எப்போது தெரியவந்தது? அதன்பின்பு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து துருவித் துருவி அதிகாரிகள் சந்தீப் குமார் கோஷிடம் விசாரணை நடத்தினார்கள். மாணவி படுகொலை செய்யப்படதும் சந்தீப் குமார் கோஷி தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. 
இதனைத் தொடர்ந்து சந்தீப் குமார் கோஷி மற்றும் அந்த மருத்துவமனையின் 4 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை (Polygraph Test) நடத்தப்பட்டது. 

இதன்பிறகு சந்தீப் குமார் கோஷியின் சொந்தமான இடங்களில் சோதனையும் நடந்தது. இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் சந்தீப் குமார் கோஷியை இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.