இந்தியா

டிராஃபிக் கவலை இனி வேண்டாம்.. 3 மணி நேர பயணம் 19 நிமிடத்தில்.. வரப்போகிறது பறக்கும் டாக்ஸி

விமான நிலையத்திற்கும் எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கும் இடையிலான பயண நேரத்தை மூன்று மணி நேரத்திலிருந்து 19 நிமிடங்களாக குறைக்கும் வகையிலான பறக்கும் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

டிராஃபிக் கவலை இனி வேண்டாம்.. 3 மணி நேர பயணம் 19 நிமிடத்தில்.. வரப்போகிறது பறக்கும் டாக்ஸி
குறைந்த நேரத்தில் பயணிக்கும் வகையிலான பறக்கும் டாக்சிகள்

பெங்களூருவில் நாளுக்கு நாள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு காரணமாக இளைஞர்கள் அதிகளவில் பெங்களூரு நகருக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். மேலும், நகர் முழுதும் ஆங்காங்கே மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதும் நெரிசலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

தொழில்நுட்ப பூங்காவிற்கு பெயர்போன நகரமான பெங்களூரு தற்போது, டிராஃபிக்கிற்கும் பெயர்போய் உள்ளது. சமீபத்திய கணக்கீட்டின் படி, மிகவும் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட ஆசிய நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் உலகளவில் ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக பறக்கும் டாக்சிகளை இயக்க சரளா ஏவியேஷன் என்ற பெங்களூரூவை சேர்ந்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துடனான ஒப்பந்தத்தில் சரளா ஏவியேஷன் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

மின்சார மூலம் இயங்கும் பறக்கும் டாக்சிகள், பயண நேரத்தை குறைக்கும் என்றும் காற்று மாசுபாட்டை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவையானது பெங்களூரு விமான நிலையத்தை, எலக்ட்ரானிக்ஸ் சிட்டியுடன் இணைக்கு வகையில் அமையவுள்ளது.

தற்போது எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து விமான நிலையம் செல்ல 52 கி.மீ. தூரத்தை 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில், பறக்கும் டாக்ஸி மூலம் 19 நிமிடங்களில் சென்றடையலாம் என்பது முக்கியமான அம்சமாகும். மின்சாரத்தில் இயங்கும் இந்த பறக்கும் டாக்ஸியில், ஏழு இருக்கைகள் [ஆறு பயணிகள் மற்றும் ஒரு பைலட்]கொண்டதாக வடிவமைக்கப்பட உள்ளது.

இந்த பறக்கும் விமானம் செங்குத்தான நிலையில் புறப்பட்டு, அதேபோல் செங்குத்தான நிலையில் தரையிறங்கும் வகையில் தயாராக உள்ளது. இந்த மின்சார விமானங்கள் மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கும் என்றும் பயணங்களுக்கு இடையே சார்ஜ் செய்ய 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சரளா ஏவியேஷன் சி.இ.ஓ. கூறுகையில்,  "செயல்திறன், குறைக்கப்பட்ட கார்பன் உமிழ்வு மற்றும் அளவிடக்கூடிய உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் நகர்ப்புற விமானப் போக்குவரத்தை மறுவரையறை செய்வதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். எங்கள் மின்சார பறக்கும் டாக்சிகள் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனில் புதிய அளவுகோல்களை உருவாக்கும். மேலும், விமானப் போக்குவரத்துக்கான உலகளாவிய தரத்துடன் இணைந்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.