இந்தியா

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவுக்கு 'நோ' சொன்ன டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம்!

டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி தர முடியாது என அம்மாநில டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவுக்கு 'நோ' சொன்ன டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம்!
Vijay is not allowed to hold a road show in Puducherry
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காகத் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வரும் நிலையில், டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணமான "ரோடு ஷோ" நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பொதுக்கூட்டம் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று புதுச்சேரி டி.ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.

தவெக-வின் மக்கள் சந்திப்புப் பயணம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்காகத் தமிழகம் முழுவதும் மக்கள் பயணத்தைத் தொடங்கினார். இதன் ஒரு பகுதியாக, திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தனது சுற்றுப்பயணத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த விஜய், அண்மையில் காஞ்சிபுரத்தில் உள் அரங்கில் மக்கள் சந்திப்பை நடத்தினார். மீண்டும் சுற்றுப்பயணத்தைத் தொடங்க சேலத்தில் இருந்து அனுமதி கோரப்பட்டு, அம்மாவட்ட காவல்துறையிடம் தவெக நிர்வாகிகள் அனுமதி கடிதம் அளித்து இருந்தனர்.

புதுச்சேரியில் அனுமதி மறுப்பு மற்றும் நிபந்தனை

இதேபோன்று, டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்புப் பயணத்தை நடத்த தவெக திட்டமிட்டு இருந்தது. இதற்காக, தவெக நிர்வாகிகள் புதுச்சேரி முதல்வர், காவல்துறை என 4 முறை அனுமதி கேட்டு கடிதம் அளித்து இருந்தனர். விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது புதுச்சேரி டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம், "ரோடு ஷோ" நடத்த அனுமதி அளிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், தவெக சார்பில் பொதுக்கூட்டம் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்றும் அவர் அனுமதி அளித்துள்ளார்.