இந்தியா

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..மகாராஷ்டிராவில் 2 பேர் உயிரிழப்பு

கொரோனாவில் பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

 மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..மகாராஷ்டிராவில் 2 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் உயிரிழப்பு
கடந்த 2020ம் ஆண்டு உலகையே புரட்டிப்போட்ட பெருந்தொற்று என்றால் அது கொரோனா. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் முடங்கியது.

கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு

இந்த நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவில் பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவின் மும்பையில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இறந்தவர்களில் ஒருவருக்கு ஹைபோகால்சீமியா வலிப்புடன் கூடிய நெஃப்ரோடிக் நோயும், மற்றொருவருக்கு புற்றுநோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதத்தில் 6,066 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதிக்கப்பட்டதாகவும், அவற்றில் 106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்களில் 101 பேர் மும்பை, தானே, புனே மற்றும் கோலாப்பூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

சுகாதாரத்துறை கண்காணிப்பு

தற்போது 52 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும், அவர்களின் உடல் நலத்தை கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சமீபத்திய நாட்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து நேற்று முன் தினம் மத்திய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், நாடு முழுவதும் 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் கூறப்பட்டது.