முகலாய மன்னரான ஔரங்கசீப் சமாதி மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ளது. ஔரங்கசீப் வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாடி கட்சியின் மகாராஷ்டிரா மாநிலத் தலைவர் அபு ஆஸ்மி தெரிவித்த கருத்துக்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர்.
ஔரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இஸ்லாமியர்களின் புனித நூலினை தீயிட்டு எரித்ததாக தகவல்கள் பரவின. அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இரு மதத்தினர் இடையே நடைப்பெற்ற வன்முறை சம்பவத்தால், பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறை சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாவா திரைப்படம் தான் காரணமா?
நாக்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வன்முறை சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சில கருத்துகளை பகிர்ந்துளார்.
அதில், "இந்த வன்முறை சம்பவமும்,கலவரமும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பிட்ட வீடுகள் மற்றும் நிறுவனங்கள் கும்பலால் குறிவைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒரு சதித்திட்டம் போல் தெரிகிறது” என்று மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், “முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் மீது மக்கள் கொண்டுள்ள கோபத்திற்கு, சமீபத்தில் விக்கி கௌஷல் நடிப்பில் வெளியாகிய சத்ரபதி சாம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான சாவா திரைப்படமே காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தில் அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் பாஜக வன்முறை சம்பவங்களை வேடிக்கை பார்க்கிறது, சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைக்க எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
Read more: 3-வது கார் வாங்க போறவங்களுக்கு சிக்கல்: டெல்லி எடுக்கப்போகும் அதிரடி முடிவு