இந்தியா

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...88.39% மாணாக்கர்கள் தேர்ச்சி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.94% கூடுதலாக தேர்ச்சி பெற்றனர்.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...88.39% மாணாக்கர்கள் தேர்ச்சி
சிபிஎஸ்சி 12ம் தேர்வு முடிவுகள் வெளியீடு
நாடு முழுவதும் மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் ( சிபிஎஸ்சி) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்றது.

88.39% மாணாக்கர்கள் தேர்ச்சி

பிப்ரவரியில் தொடங்கிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 18ம் தேதியும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்.4ம் தேதியும் நிறைவடைந்தது.இந்த நிலையில், நாடு முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 11.30 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு விவரங்களை cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை அறியலாம் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 97.39% மாணாக்கர்கள் தேர்ச்சி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் அதிகபட்சமாக விஜயவாடாவில் 99.60%, குறைந்தபட்சமாக பிரயாக்ராஜ் 79.53% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், சென்னை மண்டலத்தில் 97.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.94% கூடுதலாக தேர்ச்சி பெற்றனர். 91.64% மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில் 85.70% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நடப்பு கல்வியாண்டில் 17,04,367 தேர்வெழுத விண்ணப்பித்த நிலையில், 16,92,794 மாணாக்கர்கள் தேர்வில் பங்கேற்றனர். இதில் 14,96,307 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 88.39. இது அதற்கு முந்தைய கல்வியாண்டுடன் ஒப்பிடுகையில் 0.41 சதவீதம் அதிகம்.

தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் ஆண் மாணவர்களை விட பெண் மாணவிகள் 5 சதவீதத்திற்கும் அதிகமான தேர்ச்சியினைப் பெற்றுள்ளனர். 1.15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகவும், 24,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 95 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்தியம் வாரியாக தேர்ச்சி சதவீத விவரம்:

வெளியான தேர்வு முடிவுகளின் அடிப்படையில், தேர்ச்சி சதவீதத்தில் முதல் 5 இடங்களை பிடித்த பிராந்தியங்கள் முறையே: விஜயவாடா (99.60 %) , திருவனந்தபுரம் (99.32 %), சென்னை (97.39 %), பெங்களூரு (95.95 %), டெல்லி மேற்கு (95.37 %)

தேர்வு முடிகளை காண்பது எப்படி?

பள்ளிகளில் நேரடியாக தேர்வு முடிவுகளை காண்பதோடு, பின்வரும் முறைகளின் வாயிலாகவும் மாணாக்கர்கள் தேர்வு முடிகளை தெரிந்துக் கொள்ளலாம்.

CBSE main website - cbse.gov.in
CBSE result portal- results.cbse.nic.in
Digilocker portal - results.digilocker.gov.in
UMANG app
IVRS- 24300699 என்ற எண்ணை டயல் செய்யுங்கள் (பகுதி STD குறியீட்டுடன்)
12 ஆம் வகுப்பு மாணவர்கள் CBSE12என டைப் செய்து 7738299899 எண்ணுக்கு அனுப்பும் போது, தேர்வு முடிவுகள் SMS வாயிலாக மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்கள் பள்ளிகளால் வழங்கப்பட்ட 6 இலக்க PIN-ஐப் பயன்படுத்தி தங்கள் DigiLocker கணக்குகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் டிஜிட்டல் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.