இந்தியா

சமோசாவால் ஏற்பட்ட தகராறு.. பஞ்சாயத்தில் கணவன் மீது சரமாரி தாக்குதல்!

சமோசா வாங்கி வராததால் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு, கலவரமாக மாறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

சமோசாவால் ஏற்பட்ட தகராறு.. பஞ்சாயத்தில் கணவன் மீது சரமாரி தாக்குதல்!
A dispute over samosa
உத்தரப் பிரதேச மாநிலம், சேராபூர் வடக்குப் பகுதியில், கணவர் சமோசா வாங்கி வராததால் ஏற்பட்ட தகராறு, அவரது மனைவி மற்றும் உறவினர்களால் வன்முறையாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில், பஞ்சாயத்து கூட்டத்தில் வைத்து கணவரை கடுமையாகத் தாக்கிய மனைவி உட்பட நான்கு பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

உத்தரப் பிரதேசத்தின் ஆனந்த்பூர் கிராமத்தில் சிவம் - சங்கீதா என்ற தம்பதி வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆம் தேதி சங்கீதா, தனது கணவர் சிவமிடம் சமோசா வாங்கி வருமாறு கேட்டுள்ளார். ஆனால், சிவம் சமோசா வாங்க மறந்து வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சங்கீதா, தனது கணவர் சிவமை கடிந்துகொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சங்கீதா உடனடியாக தனது பெற்றோர்களான உஷா, ராம்லடைட் மற்றும் தனது மாமா ராமோதர் ஆகியோரை வரவழைத்துள்ளார்.

பஞ்சாயத்து வன்முறையாக மாறியது

அடுத்த நாளான ஆகஸ்ட் 31-ஆம் தேதி, இரு குடும்பத்தினருக்கும் இடையிலான பிரச்சனையைத் தீர்த்துவைப்பதற்காக, முன்னாள் கிராமத் தலைவர் அவதேஷ் ஷர்மா முன்னிலையில் ஒரு கிராம பஞ்சாயத்துக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, திடீரென வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது, சங்கீதாவும் அவரது உறவினர்களும் சேர்ந்து சிவமை கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவரது குடும்பத்தினரையும் அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

கொலை முயற்சி வழக்கு பதிவு

இந்தத் தாக்குதலில் சிவமும் அவரது குடும்பத்தினரும் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து, சிவமின் தாயார் விஜய் குமாரி, செரபுர் காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாகப் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சங்கீதா, அவரது பெற்றோர் மற்றும் மாமா உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஆய்வாளர் பிரதீக் தஹியா தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.