திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷ்யாவும் பயணம் செய்ய உள்ளது.
இந்திய ராணுவம் பதிலடி
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி அழித்தது.
இந்த நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் தொடர்பாக உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களும், அதற்கான தலைவர்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கனிமொழி தலைமையில் ரஷ்யா பயணம்
இதேபோல் திமுக நாடாளுமன்றக் குழு தலைவரான கனிமொழியை ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் குழுவின் தலைவராக மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான குழு இன்று ரஷ்யா செல்கிறது. ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் நாளை (மே23) ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஸ்பெயின், கிரீஸ், சிலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த குழு பயணம் மேற்கொள்கிறது. முன்னதாக ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழு ஜப்பானுக்கு நேற்று புறப்பட்டு சென்றது. அங்கு ஜப்பானிய அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.