இந்தியா

மீண்டும் வன்முறை பூமியான மணிப்பூர்.. இரு பிரிவினரிடையே மோதல்.. 6 பேர் உயிரிழப்பு!

வன்முறை மேலும் பரவாமல் தடுக்க ஹெலிகாப்டர்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வன்முறை நடந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அமைதியாக இருந்த மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது மாநில பாஜக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீண்டும் தலைவலியாக மாறியுள்ளது.

மீண்டும் வன்முறை பூமியான மணிப்பூர்.. இரு பிரிவினரிடையே மோதல்.. 6 பேர் உயிரிழப்பு!

இம்பால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு பெரும் வன்முறை வெடித்தது. அதாவது மணிப்பூரில் அதிகளவில் வசிக்கும் மெய்தி இனத்தை சேர்ந்த மக்கள் பழங்குடியின அந்தஸ்து கோரி போராட்டங்களில் குதித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி பழங்குடியின மக்கள் பேரணி நடத்த இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு பின்பு அது பெரும் கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொண்டனர். வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக சாலைகளில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

மாநிலம் முழுவதும் பெரிதாக வெடித்த வன்முறையில் சிக்கி 200க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதன்பிறகு வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டது. பல மாதங்கள் மணிப்பூர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இணையதள சேவையும் முடக்கப்பட்டது. இரு தரப்பிலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மணிப்பூர் பல மாதங்கள் வன்முறையில் பற்றி எரிந்த நிலையில், அதன்பிறகு அங்கு ஓரளவு அமைதி திரும்பியது. மணிப்பூர் வன்முறையை மாநில பாஜக அரசும், மத்திய அரசும் கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், பிரதமர் மோடி ஒருமுறை கூட மணிப்பூர் சென்று பார்க்கவில்லை எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

இதன்பிறகு மாநில அரசு இரு தரப்பு மக்களின் தலைவர்களையும் அழைத்து சமாதான ஒப்பந்தம் போட்டது. இதனால் மூன்று மாதங்களும் மேலாக அமைதியாக இருந்த மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் இரு பிரிவினர் இடையே புதியதாக ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூரின் மொய்ராங் நகரத்தில் மெய்தி சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் முதியவர் ஒருவரை ராக்கெட் குண்டு வீசி கொன்றனர். இதன்பிறகு இருதரப்புக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்தது. இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேலும் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்பிறகு போலீசார் சம்பவ இடத்துக்கு வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வன்முறையாளர்கள் அமைத்து இருந்த பதுங்கு குழிகளையும் போலீசார் அழித்தனர்.

அங்கு வன்முறை மேலும் பரவாமல் தடுக்க ஹெலிகாப்டர்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வன்முறை நடந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அமைதியாக இருந்த மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது மாநில பாஜக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீண்டும் தலைவலியாக மாறியுள்ளது.