சினிமா

‘நான் சாயும் போதெல்லாம் மக்கள் தாங்கிப் பிடித்தார்கள்’.. நடிகர் ரஜினி நெகிழ்ச்சி!

“நான் சாயும் போதெல்லாம் மக்கள் என்னைத் தாங்கிப் பிடித்தார்கள்” என்று ‘கூலி’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

‘நான் சாயும் போதெல்லாம் மக்கள் தாங்கிப் பிடித்தார்கள்’.. நடிகர் ரஜினி நெகிழ்ச்சி!
Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 2) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழா ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள 'கூலி' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் தனது தனிப்பட்ட கருத்துக்களையும் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் பேசுகையில், "நான் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கதை சொல்லுங்கள் என்று கேட்டபோது அவர் என்னிடம் 'நான் கமல் ரசிகர் சார்' என்று கூறினார். நான் யார் ரசிகன் என்று கேட்டேனா? அதாவது, படத்தில் பஞ்ச் டயலாக் கிடையாது, புத்திசாலித்தனமாக நடிக்க வேண்டும் என்பதை சூசகமாக என்னிடம் சொன்னார். தொடர்ந்து கதை சொன்ன அவர், இது முழுக்க வில்லன் கதாபாத்திரம் என்று கூறினார். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து ஓகே சொல்லிவிட்டேன். முதலில் படத்துக்கு 'தேவா' எனப் பெயரிடப்பட்டது. அதன்பிறகு கதையில் மாற்றம் செய்த அவர், 'கூலி' எனப் பெயர் வைக்கலாம் எனக் கூறினார். அதற்கு நான் டபுள் ஓகே என்று தெரிவித்தேன்.

லோகேஷ் கனகராஜ் தான் 'கூலி' படத்தின் உண்மையான ஹீரோ. இந்தப் படம் தொடர்பாக அவர் 2 மணிநேரம் நேர்காணல் கொடுத்தார். நான் உட்கார்ந்து பார்த்தேன் முடியல, படுத்து பார்த்தேன் முடியல, தூங்கி எந்திரிச்சு பார்த்தேன் அப்போவும் முடியல. அவ்வளவு நேரம் பேசுகிறார்.

சத்யராஜை நம்பலாம்

முன்னதாக, இந்த படத்தில் சத்யராஜ் நடிப்பதாக லோகேஷ் என்னிடம் கூறியபோது, “முதலில் சத்யராஜ் நடிக்கிறாரா என்று கேளுங்கள்” என்று சொன்னேன். ஏனென்றால், ‘சிவாஜி’ படத்தில் நான் வாங்கும் சம்பளம் அளவுக்கு அவருக்கும் கொடுக்கிறோம் என்று சொன்னோம். ஆனால் அப்போதும் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

சத்யராஜுக்கும் எனக்கும் கருத்தியல் ரீதியாக வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவர் மனதில் பட்டதை பேசக்கூடியவர். மனதில் பட்டதை பேசுபவர்களை நம்பலாம். ஆனால் உள்ளேயே வைத்திருப்பவர்களை ஒருநாளும் நம்பமுடியாது. அந்த வகையில் சத்யராஜை முழுதாக நம்பலாம்.

எத்தனை நாள் தான் நல்லவனாகவே நடிக்கிறது

இந்த படத்தில் நாகார்ஜூனா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றார்கள். நான் எப்படி என்று மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஏன்னென்றால், தென்னிந்திய திரையுலகில் பணக்கார நடிகர் அவர். எனவே பணம் கொடுத்து அவரை நிச்சயமாக படத்துக்குள் கொண்டு வர முடியாது. மேலும், அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தில் அஜித்குமாருக்கு வெங்கட் பிரபு ஒரு டயலாக் வைத்திருப்பார். 'நானும் எத்தனை நாள் தான் நல்லவனாகவே நடிக்கிறது...' என்று. அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

அவர் இன்றளவும் இளமையாக இருப்பதாய் கண்டு வியந்துபோனேன். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, 45 ஆண்டுகால உடற்பயிற்சி, கடுமையான உணவு கட்டுப்பாடு தான் இதற்கான ரகசியம் என்றார்” என அவர் கூறினார்.

தமிழக மக்களுக்கு நன்றி

தொடர்ந்து பேசிய அவர், “நான் முடிந்த அளவு இறைவனின் குரலைக் கேட்டு நடந்து கொண்டிருக்கிறேன். அதனால் நானும் நன்றாக இருக்கிறேன், என்னைச் சார்ந்தவர்களும் நன்றாக இருக்கிறார்கள். எவ்வளவு பணம், பெயர், புகழ் எல்லாம் வந்தாலும் வீட்டுக்குள் நிம்மதி இல்லையென்றால், அதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. நான் சாயும் போதெல்லாம் மக்கள் என்னைத் தாங்கிப் பிடித்தார்கள், தமிழக மக்களின் பாதங்களில் தலைவணங்கி நன்றி கூறுகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

'கூலி' திரைப்படத்தில் சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, அமீர்கான், சோபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.